Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு: உலக நாடுகள் போட்டி போட்டு வாங்குகின்றன

Print PDF

மாலை மலர் 29.08.2009

அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு: உலக நாடுகள் போட்டி போட்டு வாங்குகின்றன

வாஷிங்டன், ஆக.29-

உலகையே அச்சறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல் அடுத்து வரும் மாதங்களில் இரட்டிப்பாக பெருக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட உடன் அதை ஆபத்தின்றி தடுத்து குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் இல்லாமல் இருந்தது.

பன்றிக்காய்ச்சல் வந்தவர்களுக்கு அதை கட்டுப்படுத்த தமிபுளு மாத்திரைகளை உலகம் முழுவதும் டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள். தமிபுளு மாத்திரை அதிகப்படியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் அந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பன்றிக் காய்ச்சலை தொடக்கத்திலேயே தடுத்து விரைந்து குணப்படுத்துவதற்காக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆய்வுக்கூடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. பாரம்பரிய வைத்தியம் மூலம் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தி விடலாம் என்று சில நாடுகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பாக்ஸ்டெர் சர்வதேச மருந்து நிறுவனம், பன்றிக் காய்ச்சலுக்கு ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. ஜூலை மாதத்துக்கு முன்பே பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அறிவித்து விடுவோம் என்று சவால்விட்டு ஆய்வில் ஈடுபட்ட அந்த நிறுவனத்துக்கு தற்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டீர்பீல்டு பகுதியில் இந்த மருந்து நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு நடந்த தொடர் ஆராய்ச்சி காரணமாக அந்த நிறுவனம் எச்1 என்1 வைரசை ஒழிக்கும் நவீன மருந்தை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் 3 வகையாக உலகில் பரவி உள்ளது. இதை வேகமாக பரப்பி வரும் இன்புளுயன்சியா எச்1 என்1 வைரஸ் தனது ஆர்.என்.. என்ற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றியபடி இருந்தது.

எனவே எச்1 என்1 வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிப்பது உலகின் பல்வேறு நாட்டு மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு பாக்ஸ்டெர் நிறுவனத்துக்கு இதில் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மருந்தால் பன்றிக் காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும். அறிகுறி இருந்தால் உடனே குணப்படுத்திவிட முடியும். இந்த நிறுவனத்தின் மருந்து கண்டுபிடிப்பை உலக சுகாதார நிறுவனம் ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து பாக்ஸ்டெர் நிறுவனத்திடம் இருந்து பன்றிக்காய்ச்சலை குணப் படுத்தும் ஊசி மருந்தை பெற உலகநாடுகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் முதலில் இந்த மருந்தை யார் பெறுவது என்று பலப்பரீட்சையில் இறங்கின. இறுதியில் இங்கிலாந்து அதில் வெற்றி பெற்று முதலில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை தன் வசப்படுத்திக்கொண்டது.

அமெரிக்க அரசு, இந்த நிறுவனத்திடம் 195 மில்லியன் ஊசி மருந்தை தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இங்கிலாந்து 90 மில்லியன் மருந்து, சீனா 10 மில்லியன் மருந்து, பிரான்சு 94 மில்லியன் மருந்து, மெக்சிகோ 40 மில்லியன் மருந்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் மருந்தை பெற உலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் நிலையில் இந்தியா இன்னமும் இதில் கவனம் செலுத்தவில்லை. மத்திய சுகாதாரத்துறை எந்தவித ஆர்டரும் கொடுக்காமல் தூங்கி வழிந்தபடி உள்ளது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை எந்த அரசு நிறுவனத்தாலும் மருந்து தயாரிக்க இயலாது என்ற சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட், பனசியா பயோடெக், பாரத் பயோடெக் ஆகியவை பன்றிக்காய்ச்சல் மருந்து தயாரித்துள்ளன. மத்திய அரசு இந்த நிறுவன தயாரிப்புகள் பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் தென்அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகள் இந்த 3 இந்திய நிறுவனங்களை பன்றிக் காய்ச்சல் மருந்துக்காக நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.