Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்துக்கு ரூ. 1.5 லட்சம் கோடி தேவை

Print PDF

தினமணி 01.09.2009

அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்துக்கு ரூ. 1.5 லட்சம் கோடி தேவை

புதுதில்லி, ஆக. 31: ஆறு வயது முதல் 14 வயது வரையான குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பேசும்போது அமைச்சர் கபில் சிபல் இத் தகவலைக் கூறினார்.

11-வது திட்ட காலத்தில் ரூ. 45 ஆயிரம் கோடி செலவிடப்படும். எஞ்சிய தொகை அடுத்த திட்ட காலத்தில் செலவிடப்படும் என்றார் அவர். இந்தத் திட்டத்துக்கு ரூ. 60 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது.

எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மொத்தம் தேவைப்படும் ரூ. 1.5 லட்சம் கோடி நிதியை திரட்டும் வகையில் மாநில அரசுகளும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாநில அரசுகள் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தால்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீத நிதி என்ற இலக்கை அடைய முடியும். இனியும் காலம்தாழ்த்தாது ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதில் கல்வியின் தரம், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் கற்பிக்கும் பொறுப்பு, ஆசிரியர் - மாணவர் விகிதம் போன்ற எல்லாம் அடங்கும்.

தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும். நமது விருப்பதை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

உயர் கல்வி சீரமைப்பு குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் அதை அமல்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வடிவமைக்கவும் உயர்நிலை குழு அமைக்கப்படும்.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று. இந்த ஆணையம், உயர் கல்வி அமைப்புகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும். உயர் கல்வி தேசிய ஆணையம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

நாடு முழுவதும் ஒரே கல்வி வாரியம் என்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு வாரியத்துக்கும் உள்ள தனித்தன்மையை அரசு மதிக்கிறது என்றார் கபில் சிபல்.

இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்பட 25 மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர்.