Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 கோடி பெண்களுக்கு கல்வியறிவு திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங்

Print PDF

தினமணி 09.09.2009

6 கோடி பெண்களுக்கு கல்வியறிவு திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங்

புது தில்லி, செப். 8: 6 கோடிப் பெண்கள் கல்வியறிவு பெறும் வகையில் "எழுத்தறிவு பெற்ற இந்தியா' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங்கிவைத்தார்.

சர்வதேச எழுத்தறிவு தினத்தன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து மன்மோகன் சிங் பேசியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் 6 கோடிப் பெண்கள் உள்பட 7 கோடிப் பேரை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பெண் கல்வியறிவு வீதம் குறைந்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றம் பெற கல்வி அவசியமாகும்.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு இத்திட்டத்தை தொடங்கி உள்ளது.

இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 6 ஆயிரத்து 500 கோடியாகும். இதில் மத்திய அரசு 5 ஆயிரம் கோடியும், மாநில அரசுகள் 1,500 கோடியும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் பெண் கல்வியில் பின்தங்கிய 365 மாவட்டங்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 33 மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால் 85 சதவீத பெண்கள் பயனடைவார்கள். இவர்களில் பாதிப்பேர் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை இனப் பெண்களாக இருப்பார்கள்.

சாதி, பாலின வேறுபாடு ஆகியவற்றால் நாள்தோறும் பிரச்னைகளை சந்திக்கும் பெண்கள் அவற்றை தைரியத்துடன் எதிர்கொள்ள கல்வியறிவு அவசியம்.

உலகில் கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியப் பெண்களில் பாதிப்பேருக்கு எழுத, படிக்க தெரியவில்லை.

இதுமிகவும் வேதனை அளிக்கிறது. கல்வியறிவின்மை பெண்கள் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக விளங்குகிறது.

பொருளாதாரத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகநலத் துறையில் பெண் கல்வி ஆகியன குறைவாக இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவால்களாக உள்ளன.

இந்நிலையைப் போக்குவதற்காகத்தான் அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவைத் தலைவர் மீரா குமார் பேசியதாவது:

நாட்டின் ஸ்திரமான வளர்ச்சிக்கு கல்வி அவசியம். நம் நாட்டில் சமீபத்தில் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் மிகவும் போற்றுதலுக்குரியது என்றார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்: நாட்டில் 30 கோடி மக்கள் கல்வியறிவு பெறதாவர்களாக உள்ளனர். இந்நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "எழுத்தறிவு பெற்ற இந்தியா' திட்டம் மக்களுக்கு எழுத, படிக்க மட்டுமல்லாது எண்கணித அறிவையும் பெறுவதற்கு வழிவகுக்குகிறது.

இத்திட்டம் மக்களை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதோடு, அவர்களை நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கு பெறச் செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த 70 லட்சம் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 10 கோடி தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பாலின வேறுபாட்டை 21 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்து, ஒட்டு மொத்த கல்வியறிவு வீதத்தை 80 சதவீதமாக எட்டுவதே முக்கிய நோக்கம்.

இணை அமைச்சர் புரந்தேஸ்வரி: இத்திட்டத்தில் பெண் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர். அவர்கள் கல்வியறிவு பெற்றால் சமுதாயமும், நாடும் முன்னேறும்.

இத்திட்டத்தில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் கல்வி பெற வழிவகுப்பது இத்திட்டத்தின் நோக்கத்தில் ஒரு பகுதியாகும். இதனால் புதிதாகக் கல்வியறிவு பெறும் 1.5 கோடிப் பேர் முறைசார்ந்த கல்வி பெறுவோருக்கு இணையாக கல்விபெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் அமைச்சர் புரந்தேஸ்வரி.