Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முன்னோடி நதிநீர் இணைப்புத் திட்டம் வெள்ளநீர் கால்வாய் பணி தீவிரம்

Print PDF

தினமணி 14.09.2009

முன்னோடி நதிநீர் இணைப்புத் திட்டம் வெள்ளநீர் கால்வாய் பணி தீவிரம்

அம்பாசமுத்திரம், செப். 13: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகளை வளமாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளநீர் கால்வாய் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ஆதாரத்தைக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணை உள்பட 12 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களில் 23040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 50 கிராமங்கள் பயன்பெறும். தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாகக் கருதப்படும் இத் திட்டத்தின்படி, தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுகின்றன.

இத் திட்டத்தின்படி, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயின் 3-வது அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது.

இதனால் சாத்தான்குளம் வட்டம், சுப்புராயபுரத்தில் 2 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கும் வகையில் 2 அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.

ரூ.369 கோடி மதிப்பீட்டிலான இத் திட்டத்தின் முதல்கட்டமாக அரசு ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Last Updated on Monday, 14 September 2009 07:13