Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி வருமானம் அதிகரிப்பு

Print PDF

தினமணி 23.09.2009

வரி வருமானம் அதிகரிப்பு

புது தில்லி, செப். 22: தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரி வருமானம் 13.10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொருளாதார மீட்சியைக் குறிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக கடந்த ஓராண்டாக அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு வரிச் சலுகையை இரண்டு கட்டங்களாக அறிவித்தது. இதனால் பெரும்பாலான தொழில்களுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. 14 சதவீதமாக இருந்த வரி விதிப்பு 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது பொருளாதார நிலை மீட்சியடைந்து இயல்பு நிலைக்கு படிப்படியாகத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் அறிகுறியாக தொழில்துறை உற்பத்தி அதிகரித்தது. தற்போது அடுத்த கட்டமாக நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரியின் அளவும் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் ரூ. 49,502 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 50 பெரிய நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் குறைவான வரியை செலுத்தியுள்ளன.

இருப்பினும் நிலைமை இம்மாத இறுதிக்குள் சீரடையும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகைக் காலம் வருவதால் மூன்றாம் காலாண்டில் வரி வருவாய் உயரும் என்று அவர்கள் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதியில் நிலவும் வறட்சியின் தாக்கம் ஓரளவு இருக்கும் என்றாலும் வரி வருவாய் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிறுவனங்களின் வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்து ரூ. 44,010 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் வசூலான வருவாய் ரூ. 20,728 கோடியாகும்.

தனிநபர் வரி வருமானம் 1.7 சதவீதம் உயர்ந்து ரூ. 5,492 கோடியைத் தொட்டுள்ளது.

முதல் காலாண்டில் 44 சதவீதம் குறைவாக இருந்த வருவாய் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வசூலான வரி ரூ. 5,398 கோடி. முதல் காலாண்டில் ரூ. 725 கோடி வரி வசூலானது. முந்தைய ஆண்டு இது ரூ. 1,296 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக வரி வருவாய் செலுத்தும் பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1,832 கோடியை செலுத்தியுள்ளது. இது இரண்டாம் காலாண்டில் 17.44 சதவீதம் கூடுதலாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன.

Last Updated on Wednesday, 23 September 2009 06:58