Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிச்சலுகை படிப்படியாகக் குறைக்கப்படும்: அமைச்சரவைச் செயலர் சந்திரசேகரன் தகவல்

Print PDF

தினமணி 17.11.2009

வரிச்சலுகை படிப்படியாகக் குறைக்கப்படும்: அமைச்சரவைச் செயலர் சந்திரசேகரன் தகவல்

சென்னை, நவ. 16: தொழில்துறையை ஊக்குவிக்க அரசு அளித்த சலுகைகள் படிப்படியாகத்தான் விலக்கிக் கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகரன் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதார தேக்க நிலையிலிருந்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காக்க அரசு வரிச் சலுகைகளை அளித்தது. இதனால் அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இத்துடன் தொழில்துறை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு அளித்துவந்த வரிச் சலுகையை எந்த நேரத்திலும் திரும்பப் பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த நிதி ஆண்டில் வரிச் சலுகைகள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் சர்வதேச பொருளாதார மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இது தொடர்பாக திட்டவட்டமான அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் தில்லியில் திங்கள்கிழமை இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கே.எம். சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:

நடப்பு நிதி ஆண்டில் வரிச் சலுகைகள் திரும்பப் பெறப்படமாட்டாது. எனவே தற்போது அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும். மேலும் ஒரே சமயத்தில் இந்த சலுகைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட மாட்டாது.

வரிச் சலுகையில் சில விஷயங்கள் தொடரும். அதேசமயம் சில வரிச் சலுகைகள் விலக்கிக் கொள்ளப்படும். ஆனால் எவற்றை விலக்கிக் கொள்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதேபோல எந்தெந்த துறைகளுக்கு வரிச் சலுகைகளைத் தொடர்வது என்பதையும் தீர்மானிக்கவில்லை.

தற்போதைக்கு அனைத்துத் துறை அமைச்சர்களும் வரிச் சலுகைகளை ரத்து செய்ய வேண்டாம் என்றே அமைச்சரவைச் செயலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வரிச் சலுகைகள் அளித்ததால் தொழில்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகள் குறித்து ஆராயப்படும். பின்னர் வரிச் சலுகையைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 17 November 2009 05:19