Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரி சீரமைப்புக்கு ரூ.5,100 கோடி திட்டம்: முதல்வர் தகவல்

Print PDF

தினமணி 23.12.2009

காவிரி சீரமைப்புக்கு ரூ.5,100 கோடி திட்டம்: முதல்வர் தகவல்

விடியோ கான்பரன்ஸ் மூலம், பவள விழா கோபுரம் அமைக்க அடிக்கல்லை நாட்டுகிறார் முதல்வர் கருணாநிதி.

சென்னை, டிச 22: காவிரி மற்றும் கிளை நதிகளில் சீரமைப்பு மற்றும் கரைகள் பலப்படுத்த ரூ.5,100 கோடியில் பெரிய திட்டம் ஒன்று மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் பவளவிழா ஆண்டை ஒட்டி, அதன் வலதுகரையில் குன்றின் மீது 75 அடி உயரத்தில் பவள விழா கோபுரத் தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோகான்பரன்ஸ் மூலம் அடிக்கல்லை திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது:

மேட்டூர் அணையின் கீழே வெள்ளக் கால்வாய்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்திட கல்லணையைத் தவிர வேறு அணைகள் இல்லை. எனவே கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க 5.2.2009-ல் ரூ.189 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்தக் கதவணையின் மூலம் தேக்கப்படும் வெள்ள நீர் வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படும்.

மேலும் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.375.90 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக ரூ.93.97 கோடியைத் தர தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெறுவதற்காக, திமுக அரசு அமையும்போதெல்லாம் காவிரியிலும், கிளை ஆறுகளிலும் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை விவசாயிகள் நன்கறிவர்.

2006-ல் இந்த அரசு அமைந்ததும் ரூ.35.80 கோடியில் தூர்வாரும் பணிகள்

நிறைவேற்றப்பட்டன. வரும் ஆண்டில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தொன்மைவாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றைச் சீரமைத்திடவும், கரைகளைப் பலப்படுத்திடவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் உதவிடும் வகையில் தமிழக அரசு ரூ.5,100 கோடியில் ஒரு பெருந்திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக 75 அடி உயரத்தில் பவள விழாக் கோபுரத் தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், நீர்த் தேக்கத்தின் விரிந்து பரந்துள்ள மாட்சியையும், அதன் அருகில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகளையும், மேட்டூர் நகரின் தோற்றத்தையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்துக்கு ரூ.1 கோடியை அரசு அனுமதித்துள்ளது என்றார் முதல்வர்.