Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

முன்னோடி நதிநீர் இணைப்புத் திட்டம் வெள்ளநீர் கால்வாய் பணி தீவிரம்

Print PDF

தினமணி 14.09.2009

முன்னோடி நதிநீர் இணைப்புத் திட்டம் வெள்ளநீர் கால்வாய் பணி தீவிரம்

அம்பாசமுத்திரம், செப். 13: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகளை வளமாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளநீர் கால்வாய் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ஆதாரத்தைக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணை உள்பட 12 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களில் 23040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 50 கிராமங்கள் பயன்பெறும். தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாகக் கருதப்படும் இத் திட்டத்தின்படி, தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுகின்றன.

இத் திட்டத்தின்படி, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயின் 3-வது அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது.

இதனால் சாத்தான்குளம் வட்டம், சுப்புராயபுரத்தில் 2 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கும் வகையில் 2 அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.

ரூ.369 கோடி மதிப்பீட்டிலான இத் திட்டத்தின் முதல்கட்டமாக அரசு ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Last Updated on Monday, 14 September 2009 07:13
 

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம்

Print PDF

தினமணி 10.09.2009

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம்

புது தில்லி, செப். 9: பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள காகிதத்தால் ஆன நோட்டுகளை விட 4 மடங்கு அதிக காலம் உழைக்கக் கூடியது பிளாஸ்டிக் நோட்டுகள்.

பாலிமரால் ஆன நோட்டுகளில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது மிகவும் கடினம். எனவே பாதுகாப்புத் தன்மை மற்றும் நீண்ட காலம் உழைக்கக் கூடியது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக 100 கோடி எண்ணிக்கையில் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கென சர்வதேச அளவிலான டெண்டரை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியாதான். தற்போது நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா, ருமேனியா, பெர்முடா, புருனே, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள்தான் புழக்கத்தில் உள்ளன. தற்போது இந்தியாவும் இந்த நடைமுறையைப் பின்பற்ற உள்ளது.

Last Updated on Wednesday, 21 October 2009 06:22
 

சமச்சீர் கல்வி திட்டம் மூலம் தமிழக குழந்தைகளுக்கு ஒரேவித தரமான கல்வி கிடைக்கும் : முதல்வர் விளக்கம்

Print PDF

மாலை மலர் 09.09.2009

சமச்சீர் கல்வி திட்டம் மூலம் தமிழக குழந்தைகளுக்கு ஒரேவித தரமான கல்வி கிடைக்கும்; கருணாநிதி விளக்கம்

சென்னை, செப். 9-

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக்கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்திடவும்; இது வரை நான்கு தனித் தனி வாரியங்களின்கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதற் கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத் திடவும் தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பொதுப்பாடத்திட்டம் வகுப்பதற்கு முன்பாகவே, எந்தவகையான பாடத்திட்டம் வரப்போகிறது என்பது தெரியாமலேயே ஒரு பிரிவினர் சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும்; சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்துவதும் சரியான அணுகுமுறை ஆகாது என்ப தால், அவ்வாறு எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் பயன்படும் வகையில், சமச்சீர் கல்வியின் சிறப்பம் சங்கள் பின்வருமாறு தெளிவு படுத்தப்படுகின்றன.

சமச்சீர் கல்வியின் சிறப்பு அம்சங்கள்: -

சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல;

ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட் டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம் சங்களைத்தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாடத்திட்டம், பாட நூல்கள் குறித்து ஒளிவு மறைவின்றி பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ள படி, பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு, தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில்-ஒரே சீராக வழங்கிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித்திட்டத்திற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனத்தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 24 of 42