Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அரசு மருத்துவமனை செல்ல ரூ.70லட்சத்தில் நடை மேம்பாலம்

Print PDF

தினகரன்            22.11.2013

அரசு மருத்துவமனை செல்ல ரூ.70லட்சத்தில் நடை மேம்பாலம்

கோவை, : கோவையில் அரசுமருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில் ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்க மேயர் அடிக்கல் நாட்டினார்.

கோவை மாநகரில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், சாலையை கடக்க மக்கள் சிரமப்படும் பகுதியிலும் ‘ஸ்கைவாக்‘ என்னும் நடைமேம்பாலம் அமைக்க மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம், ரயில்நிலையம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு-சிவானந்தாகாலனி ஆகிய ஐந்து இடங்களில் இந்த நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக, கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம் ஆகிய இரு இடங்களிலும் இந்த ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, தலா ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி அடிக்கல் நாட்டினார். இப்பாலம், தரையில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும், 31 மீட்டர் நீளத்திலும் அமைகிறது. மேலே மக்கள் நடந்து செல்ல ஐந்து அடி அகலம் இடைவெளி விடப்படுகிறது. சாலையின் ஒருபுறம் பாலம் துவங்கும் இடம், மறுபுறம் பாலம் முடிவடையும் இடம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படுகிறது. மீதமுள்ளவை அனைத்தும் இரும்பு கிரில்களால் அமைக்கப்படுகிறது.

 

அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்

Print PDF

தினமணி          21.11.2013 

அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் என நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கூறினார்.

உலகக் கழிவறை தினத்தையொட்டி பல்லாவரத்தில் நகராட்சிப் பள்ளி மற்றும் பொதுக்கழிப்பறைகளில் முழுமையான துப்புரவு மேற்கொள்ளும் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமினை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், கோதண்டன் நகர், சி.எல்.சி.லைன் ஆகிய இடங்களில் உள்ள கழிப்பறைகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் திறந்தவெளியினைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை ஒழிக்கும் வகையில், முழுமையான கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணி தமிழகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாம்பரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட "நம்ம டாய்லெட்' திட்டம், பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுமையான வசதிகளுடன் தூய்மையாகவும், குறைபாடற்ற கழிவறையாக சிறந்த முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதுதான் "நம்ம டாய்லெட்' திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.

தற்போது ஸ்ரீரங்கம், ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் நகராட்சி, மாநகராட்சிகளில் அமைக்கப்படும்.

நம்ம டாய்லெட் கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.லட்சுமி, பொறியாளர் வெங்கட்ராஜ், பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் கே.எம்.ஆர். நிசார்அகமது, துணைத்தலைவர் டி.ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது

Print PDF

தினத்தந்தி           19.11.2013

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது.

வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சி ஆவதற்கு முன்பு 48 வார்டுகள் இருந்தன. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பேரூராட்சிகள், நகராட்சிகள் என பல பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உள்ளன. தற்போது மாநகராட்சியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்போதும் மாநகராட்சியில் சில இடங்களில் கழிவறைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிநவீன கழிவறைகள்

இந்த நிலையில் உலக தரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட கழிவறைகள் (நம்ம டாய்லெட்) வேலூர் மாநகராட்சியில் 13 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

மாநகராட்சியில் பழைய பஸ் நிலையம் உள்பட 13 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன தொழிற்நுட்பங்களை உள்ளடக்கிய ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தில் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு சிறப்பு நிதியாக ரூ.2½ கோடி கொடுத்துள்ளது.

மக்கள்தொகைக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ.14 லட்சம் முதல் ரூ.24 லட்சம் செலவில் அதிநவீன கழிவறைகள் அமைக்கப்படும். இதனை மாற்றுத்திறனாளிகள் கூட பயன்படுத்தலாம்.

மக்கள் பயன்பாட்டுக்கு...

இந்த கழிவறைகளில் சிறுநீர் கழித்தபின்பு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் துர்நாற்றம் வீசாத வகையில் இதன் தொழில்நுட்பம் அமைகிறது. மேலும் உட்புற, வெளிபுற சுவற்றில் கிறுக்க முடியாது, போஸ்டர்கள் ஒட்ட முடியாது. வர்ணம் பூச முடியாது. கழிவறைகளை சுத்தம் செய்வது மிகவும் எளிது. தரையில் கறைகள் பிடிக்கவே பிடிக்காது. இந்த டாய்லெட்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் காம்போசிட் மெட்டீரியலால் ஆனது.

இதற்கான டெண்டர் முடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனங்களின் தரம் குறித்து வழங்கிய ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் பணி உத்தரவு வழங்கப்படும். பணி உத்தரவு வழங்கப்பட்ட 60 நாட்களில் கழிவறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பகுதிகளிலும்

மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் இதேபோன்று ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தில் கழிவறைகள் அமைக்க தேவையான நிதியை அரசிடம் இருந்து கேட்டு பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 35 of 238