Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

52 பேரூராட்சியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் நிறுவ...திட்டம்! சேலம், நாமக்கல் மாவட்ட சாலைப்பணிக்கு பயன்

Print PDF

தினமலர்              22.08.2013

52 பேரூராட்சியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் நிறுவ...திட்டம்! சேலம், நாமக்கல் மாவட்ட சாலைப்பணிக்கு பயன்

நாமக்கல்: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், கழிவு பிளாஸ்டிக் பேப்பர்களை அரவை செய்யும் இயந்திரம் பொருத்தப்பட உள்ளது. இயந்திரத்தில் தூளாக்கப்படும் அந்த பிளாஸ்டிக் கழிவுகள், சாலைப்பணிக்கு பயன்படும் தாருடன் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம், பேரூராட்சிகளுக்கு கூடுதல் வருவாய்க்கு வழி கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில், 33 பேரூராட்சிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 19 பேரூராட்சிகளும் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி போல், பேரூராட்சியிலும் அந்த நிர்வாகம் மூலம் வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. தூய்மையான நகரை உருவாக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்தாலும், கழிவுகளை ஆங்காங்கே கொட்டி சிலர் அசிங்கப்படுத்தி விடுகின்றனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு பற்றி, பொதுமக்களுக்கு நன்கு தெரிந்திருந்தபோதும், அவற்றை வீதியில் வீசியெறிந்து, இயற்கைக்கு எதிரான கெடுதலை உருவாக்கி வருகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தாலும், வியாபார கடைகளில் பொருட்களின் பேக்கிங், பிளாஸ்டிக் கவர் மூலமே உள்ளது. தற்போது, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 52 பேரூராட்சிகளிலும், முற்றிலுமாக பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள், வாரத்தில் ஒரு நாள், அந்த நாள், எந்த நாள் என்பதை யாருக்கும் சொல்லாமல் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வின்போது, 40 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, பேரூராட்சி உதவி இயக்குனர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவு பேப்பர்களை, குப்பையில் போட்டு விடாமலும், துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து மீட்டு வரும் பிளாஸ்டிக் பேப்பர்களை, அதற்கென உள்ள இயந்திரம் மூலம் அரவை செய்து, சாலைப்பணிக்கு பயன்படுத்தும் தாருடன் சேர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒரு சில மாவட்டங்களில், தற்போது இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

சேலத்தில், வாழப்பாடி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம் பேரூராட்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், அந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், பொத்தனூர், பட்டணம் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இரண்டு மாவட்டத்திலும் உள்ள அனைத்து பேரூராட்சியிலும், அந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படுவதுடன், இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் கூறினர்.

சேலம் மண்டல உதவி இயக்குனர் பழனியம்மாள் கூறியதாவது:

சேலம், நாமக்கல் மாவட்டத்தில், ஒரு சில பேரூராட்சிகளில், பிளாஸ்டிக் அரவை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பேப்பர்களை தூளாக்கி, அவற்றை மொத்தமாக விற்பனை செய்வோம். அவர்கள், தாருடன் சேர்ந்து சாலைப்பணியை மேற்கொள்வர். ஒரு கிலோ, 25 ரூபாய் என விலைபோகும். பேரூராட்சிகளுக்கு, இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அனைத்து பேரூராட்சியிலும், இந்த இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் மத்தியிலும், இதற்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

"நாப்கின்' எரியூட்டு கருவி கழிவறைகளில் அமைப்பு

சேலம் மண்டலத்தில் உள்ள, அனைத்து பேரூராட்சி பொது கழிவறைகளிலும், குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகளில், நாப்கின் எரியூட்டும் கருவி அமைக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், குப்பைத் தொட்டியிலும், சாக்கடையிலும், வீதியிலும் ஆங்காங்கே வீசி எறிகின்றனர். இதனால், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவற்றை தவிர்த்து, அந்த கருவிகளில் நாப்கினை போட்டால், அவை தானாகவே எரிந்து சாம்பலாக வெளிவந்துவிடும். புதியதாக கட்டப்படும் பொது கழிப்பிடங்களில் அந்த கருவி பொருத்தப்படுகிறது. பெண்கள் அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சுகாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என உதவி இயக்குனர் பழனியம்மாள் வலியுறுத்தி உள்ளார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ரூ.36½ லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டிடம்

Print PDF

தினத்தந்தி               22.08.2013

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ரூ.36½ லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டிடம்


 
 
 
 
 
 
 
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மேயர் சசிகலாபுஷ்பா நேற்று காலை அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாமுவேல் புரத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிதாக ரூ.36.60 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மற்றும் இளநிலை என்ஜினீயர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கா

முன்னதாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் ரூ.50 லட்சம் செலவில் சாலையோரத்தில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவுக்கு பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நேற்று காலை மேயர் சசிகலாபுஷ்பா திறந்து வைத்தார்.

தொடர்ந்து பூங்காவில் இலவச யோகா பயிற்சி வகுப்பையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

 

மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஜரூர் விரைவில் திறக்க ஏற்பாடு

Print PDF

தினகரன்            21.08.2013

மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஜரூர் விரைவில் திறக்க ஏற்பாடு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகத்திலும், அதனை சுற்றிய பகுதிகளிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், அதன் அருகிலேயே ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி ஆம்னி பஸ்களை மாட்டுத்தாவணிக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்தது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் ஆம்னி பஸ் ஏஜென்சி அலுவலகங்கள்  அனைத்துக்கும் மாட்டுத்தாவணியில் அலுவலக கட்டிடம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் தற்காலிக ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சுவர், 30 புக்கிங் அலுவலகம், ஒரே நேரத்தில் 60 பஸ்கள் நிறுத்தும் வசதி மற்றும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

இதன் பிறகு கூடுதலாக 20 புக்கிங் அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்து திறக்கும்படி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரினர். அதன்படி ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 20 புக்கிங் அலுவலகங்கள், பயணிகளுக்கு அமருவதற்கு தனியாக நவீன வடிவிலான செட், மழை நீர் வடிகால், தார்சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா,, ஆணையர் நந்தகோபால் பார்வையிட்டு ஆய்வு நடத்தி, “பணிகளை விரைவாக முடித்து ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது, எனவே வெகுவிரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது, அதன் பிறகு அனைத்து ஆம்னி பஸ்களும் இங்கு இயங்கும். நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறைக்க வாய்ப்பு ஏற்படும்“ என்றனர்.
 
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், `ஆம்னி பஸ்கள் இடமாற்றும் திட்டம் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது. தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் தீர்க்கப்பட்டாலும், இன்னொரு சிக்கல் உருவாகக் கூடும். எனவே இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்து, ஆம்னி பஸ் பஸ் ஸ்டாண்டை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெருக்கடி தீர வழி பிறக்கும் என்றனர்.

 


Page 52 of 238