Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாளை.ரோட்டில் இடித்து தள்ளிய கட்டடத்திற்கு மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவு

Print PDF

தினமலர்       26.07.2012   

பாளை.ரோட்டில் இடித்து தள்ளிய கட்டடத்திற்கு மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவு

தூத்துக்குடி : பாளை ரோட்டில் ஜெ.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்ட பெரிய கட்டடங்களை இடிக்க மாநகராட்சிக்கு ஐந்தே முக்கால் லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. இதற்கான அனுமதி கோரும் தீர்மானம் நாளைய கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பாளை ரோட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படாமல் விட்டு, விட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில் மாநகராட்சிக்கு சொந்தமான நல்லதண்ணீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டடங்கள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக 5 லட்சத்து 72 ஆயிரத்து 40 ரூபாய் செலவாகி இருக்கிறது. இதற்கான அனுமதிகோரும் தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை காலை பத்தரை மணிக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் நடக்கிறது. கமிஷனர் மதுமதி,துணைமேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேயர் கிளார்க் துரைமணி அஜென்டா வாசிக்கிறார். கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பொருட்டு விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விபரம் மன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான நல்லதண்ணீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள பெரிய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தியதற்கு மாநகராட்சிக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 40 ரூபாய் செலவாகியுள்ளது. இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கில் சுற்றுச்சுவர் கட்டுவதற்குரிய ஒப்பந்தப்புள்ளி உட்பட பல பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் தீர்மானமும் நாளைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

பாதாள சாக்கடை திட்டம் இழுபறி நீடிக்கிறது!

Print PDF

தினமலர்       26.07.2012   

பாதாள சாக்கடை திட்டம் இழுபறி நீடிக்கிறது!

சிவகங்கை:சிவகங்கை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வராத நிலையில் டெபாசிட் தொகையாவது திரும்ப கிடைக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை நகராட்சியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக பாதாளச் சாக்கடை திட்டம் 2007ல் துவங்கியது.இதற்கான பணி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம் 5.19 கோடி,அரசு மானியமாக ரூ.12.41 கோடி, நகராட்சி பங்கீடு ரூ.5.80 கோடி உட்பட ரூ.23.40 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. நகராட்சி பங்கீட்டு தொகை ரூ.5.80 கோடியை திரட்டுவதற்காக நகராட்சி பகுதியில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் சதுர அடிக்கேற்ப டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது.பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரு கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட ஒப்பந்தப்படி கடந்த 2009ம் ஆண்டே பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேவையான 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம்,நகராட்சி திணறுகிறது.

குழாய் இணைப்பு: பெரும்பாலான தெருக்களில் சாக்கடை நீர் செல்ல குழாய்கள் பதிக்கும் பணி மட்டும் முடிந்துள்ளது.இதனால் வீட்டிலுள்ள கழிவு நீரை தாங்களாகவே பாதாள சாக்கடை குழாயில் இணைத்து விட்டதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி, இந்திரா நகர் உள்பட பல இடங்களில் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீ ரால்"டெங்கு' பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர் சந்திரவேல்ஜி கூறுகையில், "திட்டம் துவங்கிய போது, வாணியங்குடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை, தற்போது சொந்தம் கொண்டாடி ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதனால் கொட்டகுடி, அரசாணிபட்டி பகுதியில் 100 ஏக்கரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் இறுதி வடிவம் பெற்று,செயல்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்,' என்றார்.

கலெக்டர் ராஜாராமன் கூறுகையில், "பாதாள சாக்கடை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இத் திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்கு எப்படியாவது கொண்டு வருவோம்,' என்றார்.நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன் கூறும்போது, "பாதாள சாக்கடை பணியை முடித்து,செயலுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறோம். திட்டம் முழுமை பெறுவதற்குள் வீட்டு கழிவுகளை பாதாள சாக்கடை குழாயில் இணைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார். திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட்டாக வசூலிக்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்து விட்ட நிலையில் தங்களது டெபாசிட் தொகையையாவது நகராட்சி திரும்ப தருமா என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Last Updated on Thursday, 26 July 2012 06:34
 

'புதுவரவு'க்கு துப்புரவு உபகரணம் வினியோகம்

Print PDF

தினமலர்       26.07.2012   

'புதுவரவு'க்கு துப்புரவு உபகரணம் வினியோகம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஐந்து வார்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள துப்புரவு பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சி மரக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி கிடங்கு வளாகத்தில் தளவாட சாமான்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கான உபகரணங்களை மேயர் ஜெயா நேற்று பார்வையிட்டார்.அரியமங்கலம் கோட்டம் டைமண்ட் ஜூப்ளி வளாகத்தில் புதிதாக வாகன நிறுத்துமிட வசதியுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவது குறித்தும், காந்தி மார்க்கெட் வளாகத்தை மேம்படுத்துவது குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, 23வது வார்டில் பாலக்கரை மெயின்ரோட்டில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்காமல் வடிய, நடைபாதை வசதியுடன் வடிகால் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

"மாநகராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 18 லட்ச ரூபாய் மதிப்பில் துப்புரவு உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் துப்புரவு உபகரணங்கள் வாங்கப்பட்டு, மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து வார்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து வார்டுகளுக்கும் தேவையான துப்புரவு உபகரணங்கள் வழங்கப்படும்' என்று மேயர் ஜெயா தெரிவித்தார்.ஆய்வின்போது, கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 86 of 238