Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெருங்களத்தூரில் பூங்காக்கள் சீரமைப்பு

Print PDF

தினமலர்                31.12.2010

பெருங்களத்தூரில் பூங்காக்கள் சீரமைப்பு

தாம்பரம் : பெருங்களத்தூர் பேரூராட்சியில், 75.35 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் ஐமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. பெருங்களத்தூர் பேரூராட்சியில் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எட்டாவது வார்டு என்.ஜி.., காலனி மற்றும் ஒன்பதாவது வார்டு ஆர்.எம்.கே., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, 25.35 லட்ச ரூபாய் செலவில் இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு புல்தரைகள், குழந்தைகள் விளையாடும் சறுக்கு, முதியவர்கள் வாக்கிங் செல்ல நடைபாதை, நீரூற்று, பூச்செடிகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும்,பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், முக்கிய இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக 50 லட்ச ரூபாய் செலவில் ஐமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தல் மற்றும் 828 பேருக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புகழேந்தி வரவேற்றார். தாம்பரம் எம்.எல்.., ராஜா, இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 

புதுப்பொலிவு பெறுகிறது பெசன்ட் நகர் மயான பூமி

Print PDF

தினமலர்       24.12.2010

புதுப்பொலிவு பெறுகிறது பெசன்ட் நகர் மயான பூமி

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் மயான பூமி கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், 1.3 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மூன்று மாதத்தில் பணிகள் முடிக்கப்படவுள்ளன. சென்னை, மாநகராட்சி சார்பில் செயல்படும் பெசன்ட் நகர் மயான பூமி தனி சிறப்பு பெற்றது. நடிகர் சிவாஜி உள்ளிட்ட மறைந்த பிரபலங்கள், இந்த மயான பூமியில் தகனம் செய்யப்பட்டுள்ளனர். தீவிர ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் உள்ளிட்டோர், தங்களுக்கு விருப்பமானவர்கள் தகனம் செய்யப்பட்ட இடத்தை காட்சிப் பொருள் போல இன்றளவிலும் பார்வையிட்டு செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பெசன்ட் நகர் மயான பூமி, மாநகராட்சி சார்பில் அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயான பூமியில் அடக்கம் செய்ய தனி இடம், 25 கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதிகள், நடைபாதை, அமரும் இடம், புல் தரைகள், கழிப்பிட, குளியல் வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 1.3 கோடி ரூபாய் செலவில் நவீனமாக்கப்பட்டு வரும் இப்பணிகள், கடந்த மே மாதம் துவக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, பணிகளில் சற்று தொய்வு காணப்பட்டது. தற்போது, பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. அடுத்த மூன்று மாதத்தில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விருகம்பாக்கம்&அரும்பாக்கம் பகுதியில் ரூ. 147 கோடியில் மழைநீர் கால்வாய் பணி

Print PDF

தினகரன்        23.12.2010

விருகம்பாக்கம்&அரும்பாக்கம் பகுதியில் ரூ. 147 கோடியில் மழைநீர் கால்வாய் பணி

சென்னை, டிச. 23:

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் ரூ. 147 கோடியில் புதிய கால்வாய் மற்றும் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

முதல்வர் கருணாநிதி 2006ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை சென்னை மாநகரில் 171 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு 47 சதவீதம் அதிகமாக மழை பெய்தபோதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் விருகம்பாக்கம், அரும்பாக்கம், சாலிகிராமம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

இதை தடுக்க மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி இணைந்து ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1447.91 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைப்பு, பழுதடைந்த வடிகால்வாய்களை சீரமைப்பது என திட்டமிடப்பட்டது.

சென்னையில் கொளத்தூர் நீர்பிடிப்பு பகுதி, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம்&நந்தனம் நீர்பிடிப்பு பகுதி, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதி என 10 இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் 50 கி.மீ. நீளம் மழைநீர் வடிகால்வாய்கள் புதிதாக கட்டுவதற்கு ரூ. 63.19 கோடியும், 13 கி.மீ. நீளத்திற்கு பிரதான கால்வாய் கட்ட ரூ. 19.48 கோடியும், 27 கி.மீ. நீளத்திற்கு ரூ. 29.41 கோடியில் உள்ளூட்டு கால்வாயும், 9 கி.மீ. நீளத்துக்கு சீரமைப்பு பணியும் துவங்கப்பட்டு உள்ளது.

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் ரூ. 147 கோடி செலவிலான பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.

இத்திட்டம் மூலம் விருகம்பாக்கம், சின்மயாநகர், சாய்நகர், நடேசன் நகர், சாலிகிராமம், காந்திநகர், குமரன்காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்காது. இவ்வாறு மேயர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் (பணிகள்) தரேஷ்அகமது, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் தனசேகரன், மன்ற உறுப்பினர்கள் முத்துவேல், வெல்டிங்மணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேயர் தொடங்கி வைத்தார்.

 


Page 91 of 238