Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ23 கோடியில் உருவாகிறது ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு

Print PDF

தினகரன் 08.10.2010

ரூ23 கோடியில் உருவாகிறது ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு

சென்னை, ஆக.8: ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரங்கராஜபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதை ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி அறிவுரைப்படி, மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் மேம்பாலமும், ஒரு சுரங்கப்பாதையும் ரூ^134.87கோடி செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரங்கராஜபுரத்தில் ரயில் பாதையின் குறுக்கே ரூ23.76 கோடி செலவில் மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த மேம்பாலம் தி.நகர் பசுல்லா சாலை பக்கம் 264.54 மீட்டரும், ரங்கராஜபுரம் பக்கத்தில் 303.4 மீட்டரும், கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 297 மீட்டரும், ரயில்பாதையின் குறுக்கே 97.9 மீட்டரும் என மொத்தம் 962.84 மீட்டர் நீளத்திற்கும் 8.5 மீட்டர் மற்றும் 6.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த மேம்பாலம் ஒய்வடிவமைப்பில் கட்டப்படுகிறது.

இது இரு வழி போக்குவரத்தாக இருக்கும். ரயில்பாதையின் குறுக்கே கட்டப்படும் தளம் 1500 டன் எடையை தாங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த மேம்பாலத்தின் மூலம் தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு மேயர் கூறினார். ரங்கராஜபுரம் மேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்கிறார்.

 

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டூ வீலருக்கு 2 அடுக்கு பார்க்கிங் இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு

Print PDF

தினகரன் 08.10.2010

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டூ வீலருக்கு 2 அடுக்கு பார்க்கிங் இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு

சென்னை, அக்.8: கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ17 கோடி செலவில் அமைக்கப்பட்ட இரண்டு அடுக்கு பாதாள பார்க்கிங் வசதி இந்த மாதம் திறக்கப்படுகிறது. இங்கு 2 ஆயிரம் பைக் நிறுத்தலாம்.

கோயம்பேடு பஸ் நிலைய இருந்துதான் மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகிலுள்ள திருப்பதி, காஞ்சிபுரம், புதுச்சேரி செல்லவும் இங்குதான் பஸ் பிடிக்க வேண்டும். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூ வீலர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன.

டூ வீலர்களில் வருபவர்கள் ஸ்டாண்டில் நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர். திறந்த வெளியில் நிறுத்தினால் மழை, வெயிலில் பாதிப்படைகிறது. சில சமயம் திருடு போய் விடுகிறது. அருகிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருபவர்களும் டூவீலர் நிறுத்த இடமின்றி அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தரைக்கு கீழ் பாதாள பார்க்கிங் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு பாதாள பார்க்கிங் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. தரைக்கு கீழ் உள்ள இந்த பார்க்கிங்கில் இரண்டு அடுக்குகளுக்கும் இடையே 9 அடி இடைவெளி விடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

பார்க்கிங்கின் மேல் உள்ள தரை தளத்தில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடைபாதை, புல்தரை, நீரூற்று, இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் புதிய பார்க்கிங் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 08 October 2010 07:35
 

நடைபாதை மேம்பாலம் 3 இடங்களில் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 08.10.2010

நடைபாதை மேம்பாலம் 3 இடங்களில் பணி துவக்கம்

சேலம்: சேலத்தில் மூன்று இடங்களில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நேற்று துவக்க விழா நடந்தது.சேலம் மாநகர பகுதியில் நாளுக்கு நாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் புது பஸ் ஸ்டாண்டு முன்புறம், ஐந்து ரோடு, சாரதா கல்லூரி ரோடு ஆகிய பகுதிகளில் நடைபாதை மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த இம்ப்ரெஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் நடைபாதை மேம்பாலங்களை கட்டி கொடுக்க முன் வந்துள்ளனர்.
புது பஸ் ஸ்டாண்டு, சாரதா கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஐந்து ரோடு பகுதியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலும் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. நேற்று மூன்று இடங்களிலும் அதற்கான பூமி பூஜை நடந்தது. வீரபாண்டி தொகுதி எம்.எல்.., ராஜா, மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறும்போது, "" நடைபாதை மேம்பாலம் பணி முழுக்க தனியார் பங்களிப்புடன் நடக்கிறது. மூன்று இடங்களிலும் ஆறு அடி உயரம் 50 அடி நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மூன்று மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

 


Page 126 of 238