Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

களியக்காவிளை காய்கறி சந்தையில் வணிக வளாகம்: பேரூராட்சி முடிவு

Print PDF

தினமணி 22.04.2010

களியக்காவிளை காய்கறி சந்தையில் வணிக வளாகம்: பேரூராட்சி முடிவு

களியக்காவிளை, ஏப். 21: களியக்காவிளை பேரூராட்சியில் 2010-11-ம் ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், திங்கள்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

களியக்காவிளை பேரூராட்சி மன்ற அவரசக் கூட்டம் தலைவி எஸ். இந்திரா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சலாவுதீன் தீர்மானங்களை வாசித்தார்.

பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கிய சாலைகளை அமைக்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள 5 வார்டு பகுதிகள் பயனடையும் வகையில் மஞ்சவிளை-குந்நுவிளை சாலையைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேரூராட்சிகளின் பயன்பாட்டுக்கும், பொதுமக்கள் பயன்படுத்தும்வகையிலும் சமுதாய நலக்கூடம் கட்ட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந் நிதியில் பேரூராட்சிக்கு அதிக வருவாயை அளிக்கும்வகையில் களியக்காவிளை காய்கறிச் சந்தையில் வணிக வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஊருணி அல்லது குளங்களை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 2-வது வார்டுக்கு உள்பட்ட மேக்கோடு, தூற்றுக்குளத்தைத் தூர்வாரி சீரமைக்கவும், குறுகிய சாலைகளை சிமென்ட் சாலைகளாக்கும் பணிக்கு பணிக்கு பாலக்குளம் சாலை, ஆர்.சி.தெரு. கல்லறைத் தோட்டம் சாலை, குழிஞ்ஞான்விளை-எள்ளுவிளை சாலை உள்ளிட்ட சில சாலைகளை கான்கிரீட் சாலைகளாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பஸ் நிலையம் அல்லது சந்தை கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்தில் களியக்காவிளை காய்கறிச் சந்தையின் ஒரு பகுதியில் மேலும் வணிக வளாகங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

சுடுகாடு, இடுகாடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 5 லட்சத்தை, இப் பேரூராட்சியில் சுடுகாடு, இடுகாடு இல்லாததால் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சிகள் தங்களது விருப்பப்படி அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ. 5 லட்சத்தில், 12-ம் வார்டுக்கு உள்பட்ட கீழ களியக்கல் பகுதியிலும், 7-ம் வார்டில் பூதப்பிலாவிளை, குளவிளை, கைப்பிரி உள்பட பேரூராட்சியின் பல பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வார்டு உறுப்பினர்கள் என். விஜயானந்தராம், ரமா, பத்மினி, ராயப்பன், சந்திரன், என். விஜயேந்திரன், வின்சென்ட், கமால், ஜெலின்பியூலா, . ராஜு, ராதா, தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

வேளச்சேரியில் 32 கி.மீ., மழைநீர் கால்வாய் விரைவில் கட்டி முடிக்கப்படும் : மேயர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 22.04.2010

வேளச்சேரியில் 32 கி.மீ., மழைநீர் கால்வாய் விரைவில் கட்டி முடிக்கப்படும் : மேயர் அறிவிப்பு

சென்னை : ''வேளச்சேரி பகுதியில் மூன்று ஆண்டுகளில் 32 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் கூறினார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை நகரில் வெள்ள தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. நகரின் நீர்பிடிப்பு பகுதிகளை 12 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியே மழைநீர் வடிகால்வாய் கட்டுவது, நீர்வழித் தடங்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மூன்று பிரிவு பணிகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் தேர்வு செய்துள்ளது. வேளச்சேரி பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டுதல், ராஜ் பவன் கால்வாய் மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு 47 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் நேற்று காலை வேளச்சேரி அண்ணா நகரில் பணியைத் துவங்கியது. மேயர் சுப்ரமணியன் கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்து கூறியதாவது: வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்ற நிலை இருந்தது. நகரில் 1996ம் ஆண்டு மொத்தத்தில் 613 கி.மீ., மட்டுமே மழைநீர் வடிகால் கால்வாய் இருந்தது. ஸ்டாலின் மேயர் ஆன பின், 74 கோடி ரூபாய் செலவில் 135 கி.மீ., நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்ததோடு, 84 கி.மீ., நீளமுள்ள தூர்ந்த, பாழடைந்த மழை நீர் வடிகால் கால்வாய் சீர்படுத்தப்பட்டது. சமீபத்தில் ஆறு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 7.43 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால் கால்வாய், வேளச்சேரியில் கட்டப்பட்டது. கடந்த மழையில் வேளச்சேரி பகுதியில் பெரிய அளவு பாதிப்பில்லை. இருந்தாலும், முழுமையாக பாதிப்பில்லாமல் காக்க, வேளச்சேரி பகுதியில் மட்டும் 32 கி.மீ., நீளத்திற்கு 40 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணி இன்று துவங்கப்பட்டது.

அதோடு வேளச்சேரியில் இருந்து வரும் உபரி நீரை வெளியேற்ற, வீராங்கல் ஓடையில் இருந்து பக்கிங்காம் கால் வாயை இணைக்கும் வகையில் 82 கோடி ரூபாய் செலவில் புதிய கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேளச்சேரி பகுதிக்கு மட்டும் தற்போது 129 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த பணிகள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் படிப்படியாக மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும். இந்த பணி முடிந்தால், வேளச்சேரி பகுதியில் வெள்ளப் பாதிப்பு இருக்காது. இவ்வாறு மேயர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் கமிஷனர் ஆசிஷ் சட்டர்ஜி, தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 22 April 2010 06:51
 

புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க புதிய தமிழகம் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 21.04.2010

புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க புதிய தமிழகம் வலியுறுத்தல்

திருவாரூர், ஏப். 20: திருவாரூரில் நடைபெற்று வரும் புதைசாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் தேவேந்திரர் பெயர் சூட்ட வலியுறுத்தி மே. 6-ம் தேதி கட்சியின் நிறுவனர் க. கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு புதிய தமிழகம் கட்சியை அழைக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிப்பது, புதிய தமிழகம் கட்சியின் கொடியை வேறு யாரேனும் பயன்படுத்தினால், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பது, தஞ்சாவூர் - நாகை இடையே நான்கு வழிச்சாலை திருவாரூர் நகருக்குள் வந்தால் ஏழை, எளிய மக்கள், சிறு வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, இந்த விரிவாக்கத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Last Updated on Wednesday, 21 April 2010 10:31
 


Page 182 of 238