Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக அறிவியல் மையம்

Print PDF

தினமலர்            04.01.2014  

மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக அறிவியல் மையம்

சென்னை: சென்னை மாநகராட்சியின், நான்கு நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் இயங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் மேலும் ஆறு பள்ளிகளில் அறிவியல் மையம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி வசம், 92 நடுநிலை பள்ளிகள் உள்ளன. அவற்றில், 20 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அந்த மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிதில் கற்பிக்கும் வகையிலும், இளம் பருவத்திலேயே மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், நான்கு மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் தற்போது அறிவியல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.பயிலரங்கம்அந்த மையத்தை பருவத்திற்கு ஒரு முறை என, மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

நேற்று அனைத்து மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் திருவல்லிக்கேணி மாநகராட்சி நடுநிலை பள்ளி அறிவியல் மையத்தை பார்வைஇட்டனர். பின்னர் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது. தேடுதல், ஆராய்தல், கண்டறிதல் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி கல்வித்துறை இதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தது.கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ''நடப்பாண்டில் மேலும் ஆறு மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம், 10 நடுநிலை பள்ளிகளில் அறிவியல் மையம் துவங்கப்படும்,'' என்றார்.

தனியார் நிறுவன துணை தலைவர் உமா மகேஷ் கூறுகையில், ''வரும் பிப்., 28ம் தேதி மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ரீதியான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் முதலிடம் பிடிக்கும் குழுவினர் சிங்கப்பூரில் உள்ள அறிவியல் மையத்திற்கும், இரண்டாமிடம் பிடிக்கும் குழுவினர் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு பிரபல அறிவியல் மையத்திற்கும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு 'ஐ பேட்' பரிசும் வழங்கப்படும்,'' என்றார்.

 

சேலத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 7 மேம்பாலங்கள்'

Print PDF

தினமணி             04.01.2014 

சேலத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 7 மேம்பாலங்கள்'

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 7 மேம்பாலங்கள் ரூ.ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளதாக நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

 சேலம் மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆனந்தா பாலம், குண்டு போடும் தெரு பாலம் ஆகியவற்றுக்கான இணைப்புச் சாலைகள், திட்டப் பணிகளின் திறப்பு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

 மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

 கடந்த திமுக ஆட்சியில் ஆனந்தா பாலப் பணியை பெயரளவுக்குத் தொடங்கி வைத்து விட்டு, பெற வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொண்டு, திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டுச் சென்று விட்டனர். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் அறிவித்ததைப் போன்றே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆனந்தா பாலப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

 சேலம் மாநகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சேலம் 5 சாலை பகுதியில் ரூ.600 கோடி செலவில் உயர்நிலைப் பாலம் அமைக்கப்பட உள்ளது. 5 சாலையில் இருந்து நான்கு சாலை நேஷனல் ஹோட்டல் வரையிலும், மறு மார்க்கத்தில் 5 சாலையில் இருந்து சாரதா கல்லூரி வரையிலும் இந்தப் பாலம் அமைய உள்ளது.

 அதே போலவே, மணல் மேடு பகுதியில் ஒரு பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரண்டு பாலங்கள், செவ்வாய்ப்பேட்டை லாரி சந்தைப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் ஒரு பாலம், சூரமங்கலம், குரங்குசாவடி பகுதியில் தலா ஒரு பாலம் என மொத்தம் 7 பாலங்கள் கட்டப்பட உள்ளன.

 செவ்வாய்ப்பேட்டை பாலத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதை யாரும் எடுக்க முன் வராத நிலையில் இப்போது மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

 இதைத் தவிர நகரின் எல்லையான அரபிக் கல்லூரியில் தொடங்கி, நகர் முழுவதையும் சுற்றி மீண்டும் அரபிக் கல்லூரியை வந்தடையும் வகையில், எந்த இடத்திலும் இறங்கி ஏறிக் கொள்ளும் வகையில் 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

 சேலம் மாநகரில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாலப் பணிகள், சாலைப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றார் அவர்.

விழாவில் ஆட்சியர் மகரபூஷணம், மேயர் செüண்டப்பன், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம் ஆகியோர் பேசியது:

மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இந்தப் பாலத்தின் இணைப்புச் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலம் ஆட்டோ, வாகன நிறுத்தமாக மாறிவிடாமல் இருக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 விழாவில், மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், துணை மேயர் மு.நடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்                03.01.2014

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பள்ளிகள் 2.25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 17க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும்; சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. பள்ளிகளில், போதிய வசதிகள் இல்லாத நிலையில், இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதும்; சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன், பள்ளி வளாகத்திலுள்ள கட்டடங்கள் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள், போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நகராட்சி சார்பில், பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதனையடுத்து, 2.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அதிக பழுதாகியுள்ள பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் செலவிலும், மற்ற பள்ளிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக, சமத்தூர் ராமஅய்யங்கார் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், தலா 50 லட்சம் ரூபாய் செலவிலும்; ஏ.பி.டி., ரோடு நடுநிலைப்பள்ளி மற்றும் வடுகபாளையம் நடுநிலைப்பள்ளிகளில், தலா 24 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும்; பாலகோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில், 14 லட்சம் ரூபாயிலும், பாலக்காடு ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 24 லட்சம் ரூபாய் செலவிலும், மரப்பேட்டை வீதி நடுநிலைப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்," நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகள் புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் புதுப்பொலிவாக மாற்றப்படும்,' என்றனர்.

 


Page 21 of 238