Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் ரூ2.5 கோடியில் நவீனமாகிறது மேட்டுப்பாளையம் பஸ்நிலையம்

Print PDF

தினகரன்           14.12.2013

பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் ரூ2.5 கோடியில் நவீனமாகிறது மேட்டுப்பாளையம் பஸ்நிலையம்

மேட்டுப்பாளையம், : பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி பஸ்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது. 

எனவே இந்த பஸ்நிலையத்தை ரூ.2.5 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இந்த திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், ஈரோடு பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. பழைய கழிப்பறைகளை இடித்து விட்டு புதிதாக நவீன வசதியுடன் கழிப்பறைகள் கட்டப்படும்.

பொருள் வைப்பறை, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, பெண்களுக்கு தனியாக காத்திருப்பு அறை சகல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட இருக்கிறது. மேலும் அனைத்து கட்டிடங்களும் பழுது பார்க்கபட்டு மேல் பகுதியில் டைல்ஸ் ஒட்டப்பட உள்ளது.

இந்தப் பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோவன், துணைத்தலைவர் ரமாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணியை எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, வெள்ளிங்கிரி, உசேன், சூரியபிரகாஷ், நாகஜோதி, மோகன்ராஜ், தனபாக்கியம், ராதா, ஜெகநாதன், மகேந்திரன் மற்றும் நகராட்சி மேலாளர் சித்தார்த், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், அதிமுக நகர செயலாளர் வான்மதி சேட், மாணவர் அணி மாவட்ட செயலாளர் நாசர், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

முடிவில் உதவி பொறியாளர் சண்முகவடிவு நன்றி கூறினார்.

மேலும் 6, 7வது வார்டுகளில் ரூ.22 லட்சத்தில் நவீன கழிப்பறை, வெள்ளிபாளையம் ரோட்டில துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.70 லட்சத்தில் 8 வீடுகள் கட்டவும் இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

Print PDF

தினத்தந்தி            13.12.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும் என்று கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோக சேவையை மேம்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.10 கோடி செலவில் மத்திய அரசின் நகர புனரமைப்பு நிறுவன உதவியுடன் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை மின் பகிர்மான கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரசபைத்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் முகமது முபாரக் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:–

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மேட்டுப்பாளையம் நகருக்கு பிரத்யேக உயரழுத்த மின் பாதை அமைத்து அதன்மூலம் தடையில்லா தொடர் மின் வினியோகம் வழங்கப்படும். நகரில் முதன்முறையாக உயரழுத்த புதைவட (கேபிள்) மின் திட்டம் அமைத்து மின் வினியோகம் வழங்கப்படும். இதற்காக மேட்டுப்பாளையம் –சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இருந்து புதைவடம் அமைக்கும் பணி தொடங்கி, நியு எக்ஸ்டென்சன் வீதி, ஊட்டி மெயின்ரோடு காந்தி சிலை, ஆர்.எஸ்.ஆர்.சந்திப்பு, வனபத்ரகாளியம்மன் ரோடு, காட்டூர் ரெயில்வே கேட் வழியாக சான்–ஜோஸ் பள்ளி வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்தில் முடிவடையும்.

புதிதாக 130 மின் மாற்றிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குள் அமைத்து அதன் மூலம் நிலையான மின்சாரம் வழங்கப்படும். ஏற்கனவே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும், தொலை தூரத்திற்கும், ஏற்கனவே உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும் சீரான மின் வினியோகம் செய்யப்படும். நகரில் அனைத்து வீடுகளிலும் உள்ள பழைய மீட்டர்களை எடுத்து விட்டு கணக்கீட்டை துல்லியமாக கண்டறிய புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும். திட்டப்பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் அந்தந்த வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு என்.அனந்தகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாமூர்த்தி, வெங்கடேசன், உதவிபொறியாளர்கள் சுரேஷ், பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.இளங்கோவன் நன்றி கூறினார்.

 

நாய்களைப் பிடிக்க நவீன வாகனம்

Print PDF

தினமலர்             13.12.2013

நாய்களைப் பிடிக்க நவீன வாகனம்

சிதம்பரம் : சிதம்பரம், கடலூர் நகராட்சிகளுக்கு நாய்கள் பிடிக்கும் நவீன வசதிகள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள 130 தெருக்களில் 2,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடித்து பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். அவற்றைப் பிடிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கவுன்சிலர்களும் நகர மன்றத்தில் பேசி பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கலெக்டர், முதல்வர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பினர். கவுன்சிலர்களின் நிர்பந்தத்தால், கடந்த 6 மாதங்களுக்கு முன், நகரில் திரிந்த 375 தெரு நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இருந்த போதிலும் அனைத்து நாய்களையும் பிடிக்க முடிய வில்லை. நகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, தெரு நாய்களைப் பிடிக்க நவீன வசதி கொண்ட"" நாய்கள் பயண வாகனம்'' உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் 50 நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் கடலூர் நகராட்சிக்கும் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் மதிப்பு 6 லட்சம் ரூபாய். நாய்களைப் பிடித்து தனித்தனியாக அடைத்து வைக்க இந்த வாகனத்தில் தனிக்கூண்டு வசதி உள்ளது. கூண்டில் உள்ள நாய்களுக்கு சிகிச்சை அளிக்க, உணவு வழங்க வசதிகள் உள்ளன. கடலூர், சிதம்பரம் நகராட்சியில் திரியும் நாய்களைப் பிடித்து, இவ்வாகனத்தில் ஏற்றி வந்து கால்நடைத் துறை டாக்டர்கள் மூலம், நாய் ஒன்றுக்கு 150 ரூபாய் செலவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 

 


Page 31 of 238