Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினமணி     18.05.2010

உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

திருப்பூர், மே 18: திருப்பூர் மாநகராட்சி எல்லைப் பகுதியில் உள்ளூர் திட்டக்குழும ஒப்புதலின்றியும், வாகன நிறுத்துமிடம் இல்லாமலும் கட்டப்பட்டுள்ள வர்த்தக கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய்த் துறை, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும எல்லை விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலை மையில் நடந்த கூட்டத்தில், திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும பகுதியில் கட்டப்பட் டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள் குறித்தும், அவற்றைத் தடை செய்ய உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

முதல்கட்டமாக, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்லடம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை, அவிநாசி சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலை பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள வர்த்தக கட்டடங்கள் மற்றும் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழும ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதியற்ற மனைப் பிரிவுகள் உள்ள இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் "அனுமதியற்ற மனைப் பிரிவு' என்ற அறிவிப்புப் பலகை வைப்பதுடன், ஏற்கெனவே அந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிடம் வரைபட ஒப்புதல் கோரி பெறப்படும் அடுக்குமாடி கட்டடம், பொதுக்கட்டடம், கல்விக்கூடங்கள், வணிக வளாகங்கள் குறித்த விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குள் அமையும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் இணைப்புச் சாலை மற்றும் சிறு பாலங்கள், பூங்காக்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் அமைக்க கருத்துருக்கள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

மேலும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும எல்லையை விரிவாக்கம் செய்வும், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலருக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி கே.வி.முரளிதரன், திருப்பூர் மாநகராட்சி, 15வேலம் பாளையம், நல்லூர் நகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.