Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெட்ரோ ரயில்நிலையத்தில் ஆண்டுக்கு 5 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு திட்டம்

Print PDF

தினகரன் 02.06.2010

மெட்ரோ ரயில்நிலையத்தில் ஆண்டுக்கு 5 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு திட்டம்

பெங்களூர், ஜூன் 2: மெட்ரோ ரயில்நிலையங்களில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். 25 கிமீ நீள ரயில்மேம்பாலத்தில் திரட்டப்படும் மழைநீர் சேமிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கார்பன் நூலிழைகளை பெங்களூர் மெட்ரோ ரயில்பெட்டிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என பெங்களூர் மெட்ரோ ரயில் கழக இயக்குநர் பி.எஸ்.சுதீர்சந்திரா கூறினார்.

பெங்களூரில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பெங்களூர் மெட்ரோ ரயில் கழக இயக்குநர் பி.எஸ்.சுதீர்சந்திரா பேசியதாவது:

மெட்ரோ திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ரயில்பெட்டிகள் கார்பன் நூலிழைகளால் செய்யப்படும். கார்பன் நூலிழைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புஏற்படுத்தாதோடு, எடைகுறைவானதாகவும், அதிக கொள்திறன் கொண்டதாகவும் இருக்கும். இது திட்டத்தின் இரண்டாவது பிரிவில் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். 25 கிமீ நீள ரயில்மேம்பாலத்தில் திரட்டப்படும் மழைநீர் சேமிக்கப்படும். ரயில் தண்டவாளம் 10 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கிறோம். எனவே, மழைநீர் சேமிப்பு மூலம் ஆண்டுக்கு 5 கோடிலிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். மெட்ரோ, பஸ் ஆகியவற்றுக்கு பொதுவான டிக்கெட்முறை அறிமுகம் செய்யப்படும்.

இவற்றை பகிர்ந்து கொள்வதற்கான திட்டமும் வகுக்கப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு பயணிகளை அழைத்து செல்ல பேட்டரியில் இயங்கும் பஸ்கள் இயக்கப்படும். எல்லா ரயில்நிலையங்களிலும் வட்டபஸ்சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.

இந்த பஸ்கள் 3&4 கிமீ சுற்றுவட்டத்தில் செயல்படும். இதனால் வீட்டில் இருந்து ரயில்நிலையத்திற்கு செல்ல ஆகும் நேரம் குறையும்.’பெங்களூரின் பொதுபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புவசதிகள் 25 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்