Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு உத்தரவு: ஆட்சியர் தகவல்

Print PDF

தினமணி 29.06.2010

நெல்லையில் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு உத்தரவு: ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி, ஜூன் 28: சென்னை பெருநகர் வளர்ச்சி விதிகளுக்கு இணையாக திருநெல்வேலியிலும் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர் பகுதிக்கான 2 ஆம் முழுமைத் திட்டத்தின் வளர்ச்சி விதிகளுக்கு இணையாக கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் போன்ற நகர்ப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்தது.

அதனடிப்படையில், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் சார்ந்த நகர்ப்புற பகுதிகளில் (செங்கல்பட்டு, மாமல்லபுரம், கும்மிடிப்பூண்டி) வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த விதியின் சிறப்பு அம்சமாக இரண்டு தளத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அல்லது வணிக கட்டடங்கள் அல்லது நான்கு குடியிருப்புகளுக்கும் கூடுதலாக எண்ணிக்கை கொண்ட குடியிருப்பு கட்டடங்கள் அல்லது 300 சதுர மீட்டருக்கு கூடுதலாக தளப்பரப்பு கொண்ட வணிக கட்டடங்களை குறிப்பதாகும்.

இவ்வாறாக கட்டடங்களுக்கு மனையை ஒட்டியுள்ள பொதுச்சாலை அல்லது மனைக்கு வழிதரும் பாதையின் குறைந்தபட்ச அகலம் 9 மீட்டராக இருக்க வேண்டும்.

பலமாடிக் கட்டடங்கள்:

பலமாடிக் கட்டடங்கள் என்பது 4 தளங்களுக்கு மேல் அல்லது 15 மீட்டர் உயரத்துக்கு அல்லது அதற்கு மேலாக உள்ள கட்டடத்தை குறிப்பதாகும்.

இக்கட்டடங்கள் கட்டுவதற்கு 1200 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு இருக்க வேண்டும்.

மனையை ஒட்டியுள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டராக இருக்க வேண்டும். மென்பொருள் அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற உபயோகத்துக்காக கட்டப்படும் கட்டடங்கள் 1500 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரபப்பு உடையதாக இருக்க வேண்டும்.

மனையை ஒட்டியுள்ள பொதுச் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டர் ஆக இருக்குமானால் 60 மீட்டர் உயரம் வரை பன்மாடி கட்டடம் அனுமதிக்கப்படும். அச்சாலை அகலம் குறைந்தது 30.5 மீ இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும்.

இந்த வளர்ச்சி கட்டுப்பாடு விதிமுறைகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக நிலுவையில் உள்ள பன்மாடி கட்டடங்கள் உள்பட அனைத்து திட்ட அனுமதி விண்ணப்பங்களும் இவ்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடுவதற்கு முன்னர் இருந்து வந்த விதிகள் மற்றும் திட்ட வரைமுறைகளுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

யாதொரு நிகழ்வுகளிலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் எழும்பட்சத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநரை அமைப்பாளராக கொண்ட குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.