Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குர்கானில்41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

Print PDF

தினகரன் 20.07.2010

குர்கானில்41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

புதுடெல்லி, ஜூலை 20: குடிநீர் பிரச்னையை சமாளிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த குர்கான் மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இதுபற்றி குர்கான் மாநகராட்சி கமிஷனர் ஆர்.கே. குல்லார் கூறியதாவது:

நிலத்தடி நீரை மட்டுமே குர்கான் மாநகராட்சி முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது. குர்கான் நகரில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆண்டுக்கு 6அடி ஆழம் நிலத்தடி நீர் குறைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்கப்பட்டதை விட தினமும் 3 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீரை பயன்படுத்துகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் குறைவது 10 அடியாக அதிகரிக்கும் அபாயம் வந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகரம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குர்கானில் எந்த எந்த இடங்களில் மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்கலாம்? என்பதை கண்டறியவும், திட்டத்தை செயல்படுத்தவும் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனம் நகரில் உள்ள அனைத்து இடங்களையும் ஏற்கனவே பரிசீலித்து 41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

அதில் சிக்கந்தர் பூர் சவுக், இயற்பியல் பூங்கா, சுக்ராலி ஏரி, குர்கான் மாநகராட்சி, துணை கமிஷனர் அலுவலகம் உட்பட 8 இடங்களில் மழை நீர் சேகரிப்பு மைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

நகரில் பல தனியார் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டியுள்ளனர்.

குர்கானில் உள்ள டிஎல்எப் சிட்டியில் மட்டும் 17 மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர பிரசாரம் மேற்கொள்ள ப்படும். இவ்வாறு குர்கான் மாநகராட்சி கமிஷனர் ஆர். கே. குல்லார் கூறினார்.