Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

Print PDF

தினமலர் 02.08.2010

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

பேரூர்:நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக, தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கும், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் திட்ட அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் புதுநகர் வளர்ச்சி குழுமங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விதிகளுக்குட்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்படாத, தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கும் கட்டட அனுமதி மற்றும் மனை ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் திட்ட அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியானது, மனைஒப்புதலுடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்த பிறகே வழங்கப்பட வேண்டுமென்றும் அரசு தெரிவித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மாவட்ட நகராட்சி கட்டட விதி 1972, திருத்திய கட்டட விதி, முழுமைத்திட்ட நில உபயோகம், விரிவு அபிவிருத்தி திட்ட விதி, மனைப்பிரிவு நிபந்தனைகள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டு விதிகள், ஊராட்சிகளுக்கு, தமிழ்நாடு மாவட்ட ஊராட்சி கட்டட விதி 1997, முழுமைத்திட்ட நில உபயோகம், விரிவு அபிவிருத்தி திட்ட விதி, மனைப்பிரிவு நிபந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிக் கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்த பின்னரே திட்ட அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.நிபந்தனைகள் என்ன: தமிழ்நாடு மாவட்ட நகராட்சி கட்டட விதிகள் 1972, தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகள் 1997 மற்றும் கோவை உள்ளூர் திட்டக்குழும கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்திருந்தாலே திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவில், எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ வழங்ககூடாது; அனுமதி வழங்கப்பட்ட மனையில் கூடுதல் கட்டட விண்ணப்பம் பெறப்படின், உள்ளாட்சிக்கு வழங்கப்பட்ட அதிகார பகிர்வு பரப்பினுள் அமைந்திருப்பினும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது; அது தொடர்பான மனுவை கோவை உள்ளூர் திட்டகுழுமத்துக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும். மலையிட பகுதி, கடற்கரை கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் உத்தரவு நடைமுறைகளை கலெக்டர், ஊரக வளர்ச்சி அலுவலர், மாவட்ட பேரூராட்சி அலுவலர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இவற்றை பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப் படுத்த வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.