Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதி மீறி கட்டடங்கள் கட்டினால் கிரிமினல் நடவடிக்கை : தமிழக அரசுக்கு பரிந்துரை

Print PDF

தினமலர் 04.08.2010

விதி மீறி கட்டடங்கள் கட்டினால் கிரிமினல் நடவடிக்கை : தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை : "அனுமதி பெறாமல் மற்றும் விதி மீறி கட்டடங்கள் கட்டினால், அவை "சீல்' வைக்கப்படுவதோடு, உரிய நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்' என்று நீதிபதி மோகன் கமிட்டி தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னையைப் போன்றே, 33 நகரங்களில் கட்டட அனுமதி பெறுவதையும் வரன்முறைப்படுத்தியுள்ளது.

சென்னையைப் போன்றே பிற நகரங்களில் வணிக மற்றும் சிறப்புக் கட்டடங்கள் கட்டுவதற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து சி.எம்.டி..,விற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால் கால விரயம் ஏற்படுகிறது. கடந்த 1971ல் சி.எம்.டி.., தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்குனரகம்(டி.டி.சி.பி.,) மூலம் கட்டடங்கள் கட்டுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கடந்த 1985ம் ஆண்டுக்கு பிறகு பெருகிவிட்ட மக்கள் தொகை, குடியிருப்புக்கான தேவை போன்ற காரணங்களால் அனுமதி பெற்று விதி மீறுவது மற்றும் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டிக் கொள்வது என்று அத்துமீறல் மிதமிஞ்சியது.

"சி.எம்.டி.ஏ., விற்கு உரிய தொகை செலுத்தி விதிமீறலை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்' எனும் நோக்கில், கடந்த 2007, ஜூலை 27ம் தேதி, தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டிற்கு செல்லவே, "விதி மீறிய கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும்' என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்த அப்பீல், சுப்ரீம் கோர்ட்டிற்கு போனது; ஐகோர்ட் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க, நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதால், இந்த தடையை ஆண்டுதோறும் தமிழக அரசு அவசர சட்டம் மூலம் நீட்டித்து வருகிறது. தொடர்ந்து, கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் தமிழக அரசிடம் நீதிபதி மோகன் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நீதிபதி மோகன் கூறியதாவது: கடந்த 1971ல் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் தற்காலத்திற்கு பொருந்தவில்லை; பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இவற்றை திருத்தியமைத்து, இன்றைய சூழலுக்கு தக்கவாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டது. விதி மீறி கட்டடங்களைக் கட்டுவது அதிகரித்துள்ளன. அனுமதியின்றி பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. விதி மீறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், கோர்ட்டிற்கு சென்று விடுகின்றனர். இவற்றை வரன்முறைப்படுத்துவது அவசியம். அந்தக் கட்டடங்களுக்கு உடனடியாக "சீல்' வைக்க வேண்டும். அங்குள்ள கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். இவற்றை திரும்பக் கோர முடியாது. சமீபகாலமாக, "சீல்' வைக்கும் நடைமுறை உள்ளது. மேலும், இந்த விதி மீறல் தொடராமல் இருக்க, சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் அல்லது பில்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, இந்தக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. விதிமுறை மீறிய கட்டடத்தை இடித்துத் தள்ளவும் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்கான செலவுகளை, விதி மீறியோர் கோர முடியாது.

சென்னை தவிர பிற நகரங்களில் கட்டடம் கட்டுவோர் சென்னை வந்து அனுமதி பெற வேண்டும். சென்னையைப் போன்றே 33 நகரங்களில் இனி அனுமதியைப் பெறலாம். அந்தந்த நகரங்களிலேயே அதிகாரிகளை நியமித்து, திட்ட அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். ஆர்.டி.., அல்லது கலெக்டர் மற்றும் சி.எம்.டி.., அதிகாரி என அனுமதி தரும் அதிகாரிகளை நியமிக்கலாம். சாலை வசதி, நகர அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளின் போது தனிநபர்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கைப்பற்றலாம். நகர அபிவிருத்தியின் போது, அந்த தனிநபர்களுக்கும் சேர்த்து, அபிவிருத்தி செய்துவிட்டு, அதற்கான செலவை அவர்களிடம் பெறலாம். இவ்வாறு நீதிபதி மோகன் தெரிவித்தார்.

கட்டடங்களை இடிப்பதற்கான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. நீதிபதி மோகன் கமிட்டியின் பரிந்துரை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அதிகமான விதிமுறைகள் உள்ள தி.நகர், தங்க சாலை, கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகள் உட்பட கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. தமிழக அரசு, நீதிபதி மோகன் கமிட்டியிடம் பெற்ற பரிந்துரைகளில் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

வழிகாட்டுது டில்லி: கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக டில்லியில் நடந்த சம்பவத்தை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் வர்த்தக கட்டடம் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குபடுத்துதலை டில்லியில் அமல்படுத்திய போது, கடும் விமர்சனம் எழுந்தது. பிரபல வணிக நிறுவனங்களின் அங்காடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரன்முறைப்படுத்தின. இரு பாலருக்கும் பாதிப்பு வராமல், நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதைப் பின்பற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விதி மீறும் கட்டடங்கள் தப்புமா, தவிடுபொடியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.