Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம்: ஆட்சியர்

Print PDF

தினமணி 05.08.2010

பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம்: ஆட்சியர்

பெரம்பலூர், ஆக. 4: விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார்.

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையத்தில் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், நீர்வடிப் பகுதி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், வேளாண்துறை மூலம் தயாரிக்கப்பட்ட நீர் வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்ட விளக்க கையேட்டை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:

மழைநீர் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வானப் பகுதியை நோக்கி பல திசைகளுக்குச் சென்று ஒன்றிணைந்து, இறுதியாக ஓடை அல்லது கால்வாய் வழியாக ஏரி, ஆறுகளில் கலக்கும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகள்தான் நீர் வடிப் பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளில் மழை நீரைச் சேமித்து நீர்நிலை ஆதாரங்களை உருவாக்குவதும், குடிநீர், பாசன வசதிகளை ஏற்படுத்துவதும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் நோக்கமாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 30 நீர் வடிப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நீர் வடிப் பகுதி உறுப்பினர்களுக்கு பெரம்பலூரில் இரண்டு நாள்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நாளும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் வேளாண்மைத் துறை தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து தெளிவு பெறுவதோடு, தாங்கள் அறிந்த குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறுவது எளிதாகும்.

விவசாயச் சாகுபடியின் போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக மகசூல் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க விவசாயிகள் அனைவரும் தங்களது வயல்களில் பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் பெரம்பலூர் மாவட்டம் முன்னேற்றமடைந்து வருகிறது. அதைப்போல, வேளாண்மைத் துறையிலும் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும்.

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதேபோல, சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றார் விஜயகுமார்.

இதில் வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜசோழன், உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், ரோவர் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.