Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை பெருநகர் விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு

Print PDF

தினமணி 17.08.2010

சென்னை பெருநகர் விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு

சென்னை, ஆக. 16: சென்னை பெருநகர் பகுதியின் எல்லை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னரே தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

சென்னை புறநகரில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

இந்த வளர்ச்சியின் காரணமாக புறநகரில் ஒரே மாதிரியான சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், புறநகரில் சில பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளாகவும், சில பகுதிகள் ஊரக உள்ளாட்சிகளாகவும் இருப்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.

புதிய மாநகராட்சிகள்: இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி..) எல்லைக்குள் வரும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்தது.

இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சி.எம்.டி.. துணை தலைவர் தலைமையில் உயர்நிலைக் குழு 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, 2008 ஏப்ரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது மக்களின் கருத்தை அறிய தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் 2008-ல் சி.எம்.டி..வால் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இரண்டு விதமான செயற்குறிப்புகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

2 பரிந்துரைகள்: சென்னை பெருநகர் எல்லைக்குள் சென்னை மாநகராட்சியின் எல்லையை 800 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்து சென்னை மாநகராட்சியை சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவித்தல் என்பது ஒரு செயற்குறிப்பு.

ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சியின் பரப்பளவை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது. இதே சமயத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதில் 2-வது செயற்குறிப்பை ஏற்ற தமிழக அரசு, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் எல்லைகளை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த டிசம்பர் 26-ம் தேதி பிறப்பித்தது.

மேலும், தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை அறிவிப்பதை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்தது.

பெருகி வரும் தேவை: இதே சமயத்தில், சென்னை பெருநகர் எல்லைக்கு வெளியே உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருவள்ளூர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு நகர்ப்புற அந்தஸ்து அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேலும், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களின் எல்லைகளைக் காட்டிலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை மிகவும் குறைவாக உள்ளது.

அரசு முடிவு: இதனால், அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மற்ற பெருநகரங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது 1,189 சதுர கி.மீ.-ஆக உள்ள சென்னை பெருநகர் பகுதியை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யும் போது எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை அளிக்குமாறு சி.எம்.டி..வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பணிகள் தீவிரம்: இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பகுதிகளை சென்னை பெருநகர் எல்லைக்குள் சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியை சி.எம்.டி.. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என சி.எம்.டி.. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள புதிய மாநகராட்சிகளின் உத்தேச எல்லைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.