Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி அனுமதியின்றி உருவாகும் அடுக்குமாடிக்​ கட்டடங்கள்!

Print PDF

தினமணி 18.08.2010

நகராட்சி அனுமதியின்றி உருவாகும் அடுக்குமாடிக்​ கட்டடங்கள்!

அரக்கோணம்,​​ ஆக 17: அரக்கோணம் நகரில் நகராட்சி அனுமதியின்றி பல இடங்களில் 4 அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.​ இவற்றால் நகரில் பல்வேறு பிரச்னைகள் எழத் தொடங்கியுள்ளன.

அரக்கோணம் நகரையொட்டி ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உருவானபோது,​​ நகராட்சி எல்லைக்குள்ளும்,​​ பெருமூச்சு ஊராட்சி பகுதியிலும் 2 அடுக்குமாடிகளுக்கு மேல் கட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

மூன்று அடுக்கு அல்லது அதற்கு மேல் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட முனைவோர் அதற்கான அனுமதியை ஐ.என்.எஸ்.​ ராஜாளி கடற்படை விமானதள செயல் அலுவலருக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.

அதன் பின்னரே அவர்களது விண்ணப்பத்தை உள்ளுர் நகரமைப்பு குழுமம் மற்றும் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பரிசீலிப்பார் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நகரில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள காந்தி சாலையில் பழனிப்பேட்டை,​​ ​ பஜார்,​​ பழைய பஸ் நிலையப் பகுதிகள்,​​ சுவால்பேட்டை ஆகிய இடங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.​

வணிக வளாகங்களாக இக்கட்டடங்கள் உருவாகும் சூழலில்,​​ இவற்றுக்கு வருவோர் தங்களின் வாகனங்களை நிறுத்த தேவையான இடம் இல்லை என்று புகார் கூறப்படுகிறது.​ இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டு அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இக்கட்டடங்களில் இருந்து அவசர காலத்தில் வெளியேறுவதற்கான மாற்றுவழி இல்லை.​ இதனால் முக்கிய விழாக் காலங்களில் வணிக வளாகங்களுக்கு நுகர்வோர் பெரும் எண்ணிக்கையில் வரும்போது,​​ அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அவசரமாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

மேலும்,​​ நகரில் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் உணவகம்,​​ திருமண மண்டபங்கள் அமையத் தொடங்கியுள்ளதால்,​​ சுற்றுப்புறங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி தயாநிதி கூறியது:

நகரில் பல இடங்களில் அனுமதி பெறாத வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருவதை அடுத்து வளாக உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.​ இந்த விதிமீறல்களை கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களுக்கு உள்ளது.

அனுமதி தருவது அல்லது நடவடிக்கை எடுப்பது போன்ற பொறுப்புகள் வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தைச் சார்ந்தது என்றார்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானதள நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது:

அரக்கோணம் நகரில் இரண்டடுக்கு மாடிக்கு மேல் எந்தக் கட்டடத்துக்கும் ஐஎன்எஸ் ராஜாளி விமானதள நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.​ ஐன்எஸ் ராஜாளி நிர்வாகத்துக்கு 2 அடுக்குமாடிகளுக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்கான அனுமதி விண்ணப்பம் எதுவும் வரவில்லை.​

அப்படி ஏதேனும் வந்தாலும் அவை உடனடியாக ஆந்திர மாநிலம்,​​ விசாகபட்டினத்தில் உள்ள ​ கடற்படை கிழக்கு பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்த பிறகே அனுமதி குறித்த பரிசீலனை செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

அடுக்குமாடிக் கட்டடங்கள் குறித்த ஆய்வை ஐஎன்எஸ் ராஜாளியின் ஏவியேஷன் துறையினர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்வது வழக்கம்.​ கடந்த இரு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடைபெறவில்லை.​ விரைவில் இந்த ஆய்வு நடைபெறும் என்றார் அவர்.