Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் எல்லாமே காசுதான்! அதிகரிக்கும் அத்து மீறல் கட்டடங்கள்

Print PDF

தினமலர் 19.08.2010

கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் எல்லாமே காசுதான்! அதிகரிக்கும் அத்து மீறல் கட்டடங்கள்

கோவை : கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில், லஞ்சமும், முறைகேடும் அதிகரித்துள்ளது. கட்டடங்கள் கட்டுவதிலும் விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன.

கோவை மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளை உள்ளடக்கிய கோவை உள்ளூர் திட்டக் குழுமம் (எல்.பி..),ஐந்து ஏக்கருக்குட்பட்ட மனைப்பிரிவுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்துக்கு உட்படாத பெரிய கட்டடங்களுக்கும் அனுமதி வழங்குகிறது. புதிய முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது, அனுமதியற்ற மற்றும் விதி மீறிய கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுப்பது, திட்டச்சாலைகள் அமைப்பது என இந்த குழுமத்துக்கு கடமைகள் உண்டு. போதிய அளவில் தொழில் நுட்பப் பணியாளர்களோ, கூடுதல் அலுவலர்களோ இல்லாததால், கடமைகளை சரியாக செய்வதில்லை.

இதனால், அனுமதியற்ற மனைப்பிரிவுகள், கட்டடங்கள் மீதான நடவடிக்கை எடுப்பது போன்றவை அபூர்வமாகி விட்டது. கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை, காரணங்கள் கூறித் தட்டிக் கழிப்பது வாடிக்கையாகி விட்டது. குழுமத்தின் தலைவராக இருப்பவர், மாவட்ட கலெக்டர். பொறுப்பிலுள்ள கலெக்டரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே, குழுமத்தின் செயல்பாடுகளும் அமையும். முறைகேடுகள் நடப்பது, கலெக்டரின் அணுகுமுறைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்.

கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் நல்ல நிலையில் உள்ளதால், குழுமத்துக்கு வரும் விண்ணப்பங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. அடுக்கு மாடிக் குடியிருப்புகள், புதிய லே-அவுட்கள் அதிகரித்துள்ளன. செம்மொழி மாநாடு பரபரப்பு முடிந்த பின்னும், மாவட்ட நிர்வாகத்தின் கவனம் வேறு எந்தப் பக்கமும் திரும்பியதாகத் தெரியவில்லை. உள்ளூர் திட்டக் குழும நிதியைப் பயன் படுத்தி மூன்று இணைப்புச் சாலைகள் அமைத்ததைத் தவிர, வேறு எந்த உருப்படியான வேலையும் ஓராண்டில் நடக்கவில்லை. உள்ளூர் திட்டக் குழுமத்தில் லஞ்சமும், ஊழலும் உச்சக்கட்டத்தில் இருப்பதாக கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தோர் புகார் கூறி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிரமான கண்காணிப்பு இல்லாததால், கோவை நகரில் பல இடங்களில் "பார்க்கிங்' வசதி, அணுகுசாலை எதுவுமே ஏல்லாமல் ஏராளமான வணிக கட்டடங்கள், கல்வி நிலைய கட்டடங்கள கட்டப்படுகின்றன. பெரும்பாலானவை விதிகளை மீறியவை; பல கட்டடங்கள் அனுமதியற்றவை. கோவை கிராஸ்கட் ரோட்டில் சமீபத்தில் கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டடம் எதுவுமே முறைப்படி அனுமதி பெறவே இல்லை. சில கட்டடங்கள், பெற்ற அனுமதிக்கும் மேல் கட்டடங்களைக் கட்டியுள்ளன. அதே சாலையிலுள்ள ஜவுளிக்கடை கட்டடம் ஒன்று, கட்டுமான விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது.

உத்தேச திட்டச்சாலைகளுக்குரிய இடங்களை விற்கவும் குழுமம், நகர ஊரமைப்புத்துறைக்குப் பரிந்துரைப்பதும் அதிகரித்துள்ளது. நகர வளர்ச்சிக்கேற்ப இணைப்புச்சாலைகள் அமைக்கும் வாய்ப்பு கை நழுவி, எதிர்காலத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. செம்மொழி மாநாட்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திய கலெக்டர் உமாநாத், இத்தகைய பிரச்னைகளின் மீதும் கவனத்தைத் திருப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.

இடத்தை மாத்தணும் : கோவை எல்.பி.., அலுவலகத்தில் முன்பெல்லாம், இலை மறை காய் மறையாக லஞ்சம் வாங்குவதும், பேரமும் நடந்து கொண்டிருந்தது. இப்போது, அலுவலகத்திலேயே பகிரங்கமாக பேரம் பேசுவதும், இடைத்தரகர்களே "பைல்'களை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளது.கலெக்டரின் நேரடி கண்காணிப்பு இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது. கலெக்டரின் நேரடி பார்வையில் இருக்கும் வகையில், இந்த அலுவலகத்தை, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என, கட்டுமானத் தொழிலில் இருப்போர் கருதுகின்றனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:39