Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமுறை மீறி கட்டப்படும் வணிக வளாகங்கள்

Print PDF

தினமலர் 19.08.2010

விதிமுறை மீறி கட்டப்படும் வணிக வளாகங்கள்

சேலம்: வணிக வளாகங்கள் கட்டப்படும் போது, வாகன நிறுத்துமிடத்துக்கு தாராளமாக இடம் விடாமல் கட்டுவதால், ரோடுகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதனால், சேலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இப்பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.சேலம் மாநகரில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். டூவீலர்களும், கார்களும் அதிகரித்துவிட்டன.

மாநகரில் முக்கியமான ரோடுகளில் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அனைத்து வணிக நிறுவனங்களும் முறையாக கட்டப்படுவதில்லை. ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் அவர்களுக்குண்டான பார்க்கிங் வசதி செய்து கொள்வதில்லை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுவே போக்குவரத்து பிரச்னைக்கு மூலகாரணமாக அமைகிறது.

பெரும் நகரங்களில் வணிக வளாகம் கட்டும் போது மாநகராட்சி மற்றும் நகரமைப்பு (டவுன் பிளானிங்) அலுவகத்தில் அனுமதி பெற்று, அவர்களுடைய வரைமுறைக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு. ஆனால், பெரும்பாலான வணிக வளாகங்கள் வரைமுறைக்கு உட்பட்டு கட்டவில்லை. மாநகராட்சி நிர்வாகமோ இது போன்ற வணிக வளாகங்கள் முறையாக கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்வதில்லை. மாநகரில் 80 சதவீதம் வணிக வளாகங்களில் தற்பொழுது பார்க்கிங் வசதி கிடையாது.சேலம் நான்கு ரோட்டிலிருந்து, டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப், புது பஸ் ஸ்டாண்ட் ஐந்து ரோடு வரையிலும், அஸ்தம்பட்டியிலிருந்து, சாரதா காலேஜ் ரோடு, ஜங்ஷன் ரோடு வரையிலும், செரிரோடு, முள்ளுவாடி கேட், பழைய பஸ் ஸ்டாண்ட், குகை, பிரபாத், தாதகாப்பட்டி வரையிலும் இதுபோன்ற வணிக நிறுவனங்களின் முன் நிறுத்தப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மாநிலத்தில் விபத்து இல்லாத பத்து நகரங்களில் சேலம் மாநகரும் தேர்வு செய்யப்பட்டு, மாநில அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. ஆனால், தினம் தினம் மாநகரில் விபத்துக்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீஸார் இல்லாதது மற்றும் கண்டபடி வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதும் தான். தற்பொழுது ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீஸார் பணியில் உள்ளனர். சில இடங்களில் மகளிர் போலீஸார் பணியில் உள்ளனர். அவர்கள் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்படுகின்றனர்.மின்தடை பிரச்னை பல்வேறு தரப்பட்ட தொழில், மக்களை பாதிப்படைய செய்திருக்கும் வேளையில் போக்குவரத்து சிக்னலையும் விட்டு வைக்கவில்லை.

மாநகரில் மின்தடை அமலில் உள்ள நேரங்களில் அந்த பகுதியில் உள்ள சிக்னல்களும் இயங்குவதில்லை. இதனால் முக்கிய இடங்களில் வாகனங்கள் தாறுமாறாக சென்று கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.வரும் 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி சேலம் வர இருப்பதால், கட்சியினர் அவரை வரவேற்று பேனர், கட்-அவுட், அலங்கார வளைவுகள், கட்சி கொடிகள் கட்டி வருகின்றனர். அதனால் போக்குவரத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மாநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மூன்று மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது.மாவட்ட நிர்வாகம், சேலம் போலீஸ், மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, காலம் தாழ்த்தாமல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 19 August 2010 08:40