Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட அனுமதிக்கு புதிய விதி : கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு

Print PDF

தினமலர் 20.08.2010

கட்டிட அனுமதிக்கு புதிய விதி : கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு

சேலம்: கட்டிட அனுமதி பெற அரசு தற்போது அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு அனுமதி பெற்ற கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழு உரிமம் பெற்ற கட்டிட பட வரைவாளர்களின் பொதுக்குழு கூட்டம், ஹோட்டல் லட்சுமி பிரகாஷில் நடந்தது.தலைவர் அங்கப்பன் தலைமை வகித்தார். ஆலோசகர் நடராஜ் முன்னிலை வகித்தார். சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் உள்ளூர் திட்டக்குழுமம் பகுதிக்குள் அமையும் பகுதிகளுக்கு மட்டும் தனியான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதியினை தமிழக அரசால் வெளியிட்டது. இவ்விதி அனுமதியற்ற மனைப்பிரிவை ஆதரிக்கவும், அனுமதியற்ற கட்டிடங்கள் பெருகுவதற்கு வழிவகை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், நிலையில் உள்ள சாலைகள் ஏதேனும் ஒரு உள்ளாட்சியின் பராமரிப்பில் இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவின்படி சாலை அகலம் குறைந்தபட்சம் 30 அடி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உபயோகத்தில் உள்ள சாலைகள் 20 அடிக்கும் குறைவாகவே உள்ளது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 23 அடி அகலம் கொண்ட சாலைகள் அமைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசு வெளியிட்டுள்ள விதிமுறையில் 23 அடி அகலம் கொண்ட சாலைகள் அமைத்து அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

அனுமதி வழங்கப்படும் மனைப்பிரிவுகளில் பொது ஒதுக்கீட்டிற்கான இடம் (பூங்கா) ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறையில் செயல்படுத்த முடியாத விதியாகும்.

தரைதளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட கட்டிடங்கள் அனைத்தும் சிறப்பு கட்டிட விதிகளின் கீழ் அமைகிறது. வணிகம், அடுக்குமாடி குடியிருப்பு போன்ற கட்டிடங்களுக்கு பக்க திறவிடம் கட்டிடத்தின் மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்கு இடம் விட வேண்டும். ஆனால் தங்கும் விடுதி, ஹோட்டல்கள், மருத்துவமனையை சுற்றி நான்கு புறத்திலும் 20 அடி அகலம் திறந்த வெளி விட வேண்டும் என்று தற்போதைய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று. இது போன்ற விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயலாளர் செந்தில்வேலவன், பொருளாளர் நந்தகுமார், பி.ஆர்.., பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.