Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குத்தகைக்கு அறநிலையத்துறை நிலம் தந்தால் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

குத்தகைக்கு அறநிலையத்துறை நிலம் தந்தால் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் நகராட்சி அறிவிப்பு

மயிலாடுதுறை, ஆக. 25: மயிலாடுதுறையில் தென்னை மரச்சாலை இடத்தை நீண்டகால குத்தகைக்கு அளிக்க இந்து அறநிலையத்துறை முன்வந்தால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் குத்தாலம் தொகுதி முன் னாள் எம்எல்ஏ கல்யாணம் மயிலாடுதுறை நகரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது பற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு மயிலாடுதுறை நகராட்சி (பொ) ஆணையர் வாசுதேவன் அளித்துள்ள விளக்கம்:

மயிலாடுதுறை தென்னை மரச்சாலையில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 3.91 ஏக்கர், தனியாருக்கு சொந்தமான 1.27 ஏக்கர், பொதுப்பணி துறைக்கு சொந்தமான 73 சென்ட் என 5.91 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தை ரூ.1.70 கோடிக்கு வாங்குவதற்கு நகராட்சியில் பணம் இல்லை. பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதியை வட்டியின்றி நீண்டகால தவணையில் செலுத்தவும், அந்த இடத்திற்கான முன் நுழைவு அனுமதி தரவும் செயல் அலுவலருக்கு கடந்த ஏப்ரல் 5ம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் எதுவும் வரவில்லை.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் நகராட்சி நிதியை கருத்தில்கொண்டு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 3.91 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடி கிரயத்தின்பேரில் பெற்றுக்கொண்டு எஞ்சியுள்ள நிலத்தை 30 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின்பேரில் பெற்று விரைவில் பஸ் நிலையம் அமைக்க நகராட்சியும், இந்து அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது.

கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தகுதியான இடம் என்று சான்றளித்து இடத்தை கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். இதுவரை நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்களும் வெங்கடேஸ்வரன் என்பவரின் ரிட் மனுவால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மேற்கண்ட நிபந்தனையின்பேரில் இடம் நகராட்சிக்கு கிடைத்தால் 2 ஆண்டில் பஸ்நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு நகராட்சி (பொ) ஆணையர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மயிலாடுதுறையில் நேற்று முன்னாள் எம்எல்ஏ கல்யாணம் நிருபர்களிடம் தெரிவித்தார்.