Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியார் வசம் மாநகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள்!

Print PDF

தினமணி 27.08.2010

தனியார் வசம் மாநகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள்!

சென்னை, ஆக.26: சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை (.எஸ்.ஆர்.) வழங்காமல், தங்களது வசமே ஆண்டுக் கணக்கில் பராமரித்து வரும் 30-க்கும் மேற்பட்ட தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குச் சேர வேண்டிய திறந்தவெளி நிலங்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த நிலங்களை மாநகராட்சி மீட்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியனிடம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி அண்மையில் புகார் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலிடம் இருந்து, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான 22 கிரவுண்ட் திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியிடம் திறந்தவெளி நிலங்களை வழங்காத வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாநகராட்சியிடம் நிலங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றுகூறிவிட்டு, தங்களின் வசம் நிலங்களைப் பராமரித்து வரும் நிறுவனங்கள், நிலத்தின் அளவு மற்றும் மதிப்பு ஆகிய விவரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு நிலங்களை வழங்க வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் குறித்த பட்டியல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி..) இருந்து பெறப்பட்டுள்ளது. அதுபோல ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மூலம் இருந்தும் ஒரு பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டிய திறந்தவெளி நிலங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிலத்தின் அளவு, அதன் தற்போதைய சொத்து மதிப்பு ஆகியவைக் கணக்கிடப்பட்டுள்ளது. திறந்தவெளி நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிப்பு பணிகளை மாநகராட்சி கண்காணிப்பு (விஜிலென்ஸ்) பிரிவு செய்து வருகிறது. பட்டியல் தயாரிப்பு முடிந்ததும் மேயரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 4 ஆண்டுகளில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் ரூ. 200 கோடி மதிப்பிலான சுமார் 3.50 ஏக்கர் நிலம், மாடம்பாக்கத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 30.25 ஏக்கர் நிலம் என பல்வேறு இடங்களில் இருந்து ரூ.3,000 கோடி மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விதி என்ன?

சென்னையில் 3,000 சதுர மீட்டரில் இருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையில் பல மாடிக் கட்டடம் கட்டும் நிறுவனங்கள், மாநகராட்சிக்கு 10 சதவீத தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்.

இதில் 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்டும் நிறுவனங்கள், அதில் 10 சதவீத இடத்தை (திறந்தவெளி) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி..) மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், பல வர்த்தக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை வழங்காமல், தங்களது பயன்பாட்டில் வைத்துள்ளன. திறந்தவெளி நிலங்களை வழங்காத நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 80 என கணக்கிடப்பட்டுள்ளன.

அதில் சுமார் 56-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் திறந்தவெளி நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.