Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அதிக இடைவெளியுள்ள ஊர்கள் பரிசீலனை

Print PDF

தினகரன் 30.08.2010

மாநகராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அதிக இடைவெளியுள்ள ஊர்கள் பரிசீலனை

மதுரை, ஆக. 30: மதுரை மாநகர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் மாநகராட்சியுடன் இணைப்புக்கு உயர் அதிகாரிகள் அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எல்லையிலிருந்து இருந்து இடைவெளியுள்ள ஊர்களை இணைப்பது மட்டும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லை 52 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. 36 ஆண்டுகளாக எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால், நகருக்குள் நெருக்கடி அதிகரித்து ஒரு சதுர கி.மீ.க்கு 23 ஆயிரம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

200 சதுர கி.மீ. பரப்புள்ள மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்து. இதற்கான ஆவணங்கள், வரைபடங்கள் மாநகராட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. ஐகோர்ட் கிளை அமைந்துள்ள பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டுமென அதன் பதிவாளர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே ஐகோர்ட் கிளை அமைந்துள்ள உத்தங்குடி ஊராட்சி பகுதி மாநகராட்சியில் இணைக்க ஒப்புதல் ஆனது.

வரைபடத்தில் மாநகராட்சி எல்லையை ஒட்டி இடைவெளியே இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ள பகுதிகளை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேலமடை, சின்ன அனுப்பானடி, நாகனாகுளம், கண்ணநேந்தல், திருப்பாலை ஊராட்சிகள், பெருங்குடி. இணைப்புக்கு உறுதி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் குறிப்பிட்ட தூரம் வீடுகளே இல்லாமல் இடைவெளியுள்ள பகுதிகளை மட்டும் மாநகராட்சியுடன் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு வெளியாகும் என தெரிகிறது.

காவல் எல்லை விரிவாக்கமும் தயார்:

மாநகராட்சி எல்லை விரிவாக்கம் அறிவிப்பு வெளியானதும், காவல்துறை ஆணையர் நிர்வாக எல்லையையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லை விரிவடைந்ததும், அதே அளவுக்கு காவல்துறை ஆணையர் நிர்வாக எல்லையும் விரிவடைகிறது.