Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழநியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தேக்கம் ஒப்பந்ததாரர்கள் மெத்தனத்தால்

Print PDF

தினகரன் 02.09.2010

பழநியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தேக்கம் ஒப்பந்ததாரர்கள் மெத்தனத்தால்

பழநி, செப்.2: அதிகாரிகளின் அலட்சியத்தாலும், ஒப்பந்ததாரர்களின் மெத்தனத்தாலும் பழநி நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள் ளது.

பழநி நகராட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி, பாராளுமன்ற உறுப்பினர் நிதி, பிற்படுத்தப்பட்டோர் நிதி, கல்வி நிதி, நபார்டு நிதி, குடிநீர் நிதி, நகராட்சி வருவாய் நிதி உள்ளிட்ட நிதிகளைப் பெற்று வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் குடிநீர், சாலை வசதி ஏற்படுத்துதல், சாக்கடை தூர்வாருதல், சிறுபாலங்கள் அமைத்தல், பள்ளிக்கட்டிடம் அமைத்தல், பூங்காக்கள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் அனைத்தும் வெளிப்படை ஏலத்தின் மூலம் ஒப்பந்ததாரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்படுகிறது. காலதாமதத்திற்கு அபராதம், நிதி பிடித்தம் செய்வது, பிற பணிகளை எடுக்க தடை விதிப்பது துவங்கி பணிகளே எடுக்க முடியாத அளவிற்கு கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது வரை விதிமுறை உள்ளது. இதனை நகராட்சியின் பொறி யியல் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், விதிமுறைகள் பெரும்பாலும் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் பழநி நகராட்சியில் சுமார் ரூ.4.50 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் உரிய காலங்களில் முடிக்கப்படாமல் உள்ளன.

கடந்த நகர்மன்ற கூட்டத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான பணிகளை டெண்டர் எடுத்து முடிக்காதிருந்த ஒப்பந்ததாரர் ஒருவரை கறுப்பு பட்டியலில் சேர்க்க நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு கவுன்சிலர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒப்பந்ததாரரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து நகர்மன்றத்தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘‘பணிகள் தேக்கமடையாமல் இருக்க ஒப்பந்ததாரர்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.