Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

Print PDF

தினமணி 06.09.2010

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

சென்னை, செப். 5: பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி சென்னை புறநகரில் 19 இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அருகில் 100 மீட்டர் சுற்றளவு வரை புதிய கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின. இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது.

இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.

சென்னையில்...

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகரில்...

சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்லாவரத்தில்...

பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.