Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி எல்லை மறுவரையறை ஆற்காடு & வாலாஜா விடுவிப்பு

Print PDF

தினகரன் 09.09.2010

வேலூர் மாநகராட்சி எல்லை மறுவரையறை ஆற்காடு & வாலாஜா விடுவிப்பு

வேலூர், செப்.9: ஆற்காடு, வாலாஜா மற்றும் பெரும்பாலான ஊராட்சிகளை விடுவித்து வேலூர் மாநகராட்சியின் எல்லைகளை குறைத்து வரையறை செய்ய இன்று அவசரக்கூட்டம் நடக்கிறது.

வேலூர் மாநகராட்சி அவசரக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.

வேலூர் நகரை சுற்றியுள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து மாநகராட்சி உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2008ம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டு வேலூர் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்தது.

பின்னர் கடந்த மார்ச் மாதம் 75 உள்ளாட்சி அமைப்புகளை வேலூர் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியானது. அதன்படி மொத்த பரப்பளவு 383.842 .கி.மீ ஆக இருந்தது. இது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளிலேயே அதிக பரப்பளவுடன் கூடிய மாநகராட்சியாக உருவெடுத்தது.

இதில் 65 கிராம ஊராட்சிகள் அடங்கி உள்ளன. பெரிய அளவில் ஊராட்சிகளை இணைப்பதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிதியுதவிகள் கிடைக்காமலும், விவசாய வளர்ச்சிக்குரிய திட்டங்கள் செயல்படுத்த முடியாமலும் போய்விடும். அவை வெகுதூரத்தில் அமைந்துள்ளதால் மாநகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வேலூர் மாநகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள சத்துவாச்சாரி மற்றும் தாராபடவேடு ஆகிய 3ம் நிலை நகராட்சிகள், சேண்பாக்கம், அல்லாபுரம், தொரப்பாடி, கழிஞ்சூர், காந்திநகர் மற்றும் காட்பாடி ஆகிய பேரூராட்சிகளுடன் 8 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியை விரிவுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மாநகராட்சி எல்லை 84.715 .கி.மீ. பரப்பளவு கொண்டதாக மாறுகிறது. இதனால் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகள் விடுவிக்கப்படுகிறது.

எனவே 16 உள்ளாட்சி அமைப்புகளை மட்டும் வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கவும் மற்ற 59 உள்ளாட்சி அமைப்புகளை வேலூர் மாநகராட்சியில் இணைப்பதில் இருந்து நீக்கம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.