Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவு விற்பனைதாராபுரத்தில் அரசு விதி மீறல்

Print PDF

தினமலர் 09.09.2010

ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவு விற்பனைதாராபுரத்தில் அரசு விதி மீறல்

தாராபுரம்: தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் புதிய லே-அவுட் பகுதிகளில் ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவுகள் விற்கப்படுகின்றன. தாராபுரம் பகுதிகளில் காலி இடங்கள் இல்லை. வாடகை வீடுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இணையாக வீட்டு வாடகை எகிறியுள்ளது. இந்நிலையில், நகராட்சியின் எல்லைப்பகுதிகளான கவுண்டச்சிபுதூர், நஞ்சியம்பாளையம், கொளத்துப்பாளையம் ஊராட்சிகள் மற்றும் பழனி, உடுமலை, அலங்கியம் ரோடு பகுதிகளில் தற்போது புதிய லே-அவுட்டுகள் உருவாகி வருகின்றன.ஒரு ஏக்கர் நிலத்தை மனைப்பிரிவாக பிரிக்கும்போது, 10 சென்ட் இடத்தை பொது உபயோகத்துக்காக விட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது.

உரிமையாளர்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும் புரோக்கர்கள், விவசாய நிலங்களை மனைப்பிரிவுகளாக மாற்றுகின்றனர். மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்ட பின், ஊராட்சி அனுமதி பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஐந்து ஏக்கரில் மனைப்பிரிவுகளாக பிரிக்க வேண்டுமெனில், 50 சென்ட் இடத்தை பொது உபயோகத்துக்கு எழுதித்தர வேண்டும். ஆனால், சில மனை பிரிவு உரிமையாளர்கள் ரிசர்வ் சைட் இடம் ஒதுக்காமல், அரசு விதிகளுக்கு மாறாக முழு இடத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகமோ, பத்திரப்பதிவு அதிகாரிகளோ இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக மனைப்பிரிவுகள் விற்பனையாகும் தாராபுரம் தாலுகா பகுதியில், புதிய மனைப்பிரிவுகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, ரிசர்வ் சைட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து பத்திரப்பதிவு அலுவலருக்கு பத்திரப்பதிவு செய்ய பரிந்துரைக்க வேண்டும்.