Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழற்றிவிடப்படும் 59 உள்ளாட்சி அமைப்புகள் எல்லையை சுருக்கிக் கொள்ள வேலூர் மாநகராட்சி திட்டம்!

Print PDF

தினமணி 09.09.2010

கழற்றிவிடப்படும் 59 உள்ளாட்சி அமைப்புகள் எல்லையை சுருக்கிக் கொள்ள வேலூர் மாநகராட்சி திட்டம்!

வேலூர், செப். 8: தமிழக அரசால் முடிவு செய்யப்பட்ட 75 உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்குப் பதிலாக, 16 உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே இணைத்துக்கொள்ளவும், தனது எல்லையை சுருக்கிக் கொள்ளவும் வேலூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

வேலூர் நகராட்சி 2008 ஜூலை 29-ம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது வேலூர் நகராட்சியோடு 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகளை இணைக்க அரசு உத்தேசித்திருந்தது.

இதற்கிடையே, வேலூர் நகரத்தின் தென்பகுதியில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி, மேற்குப் பகுதியில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையம், வடக்குப் பகுதியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் காட்பாடி ரயில் நிலையம் ஆகியவற்றோடு கிழக்குப் பகுதியில் 25 கி.மீ. தொலைவில் உள்ள ராணிப்பேட்டை தொழில் நகரம் போன்றவை உத்தேச வேலூர் மாநகராட்சியில் இணைக்கப்படலாம் என 2010 மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தேச எல்லையில் 65 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 75 உள்ளாட்சி அமைப்புகள் இடம் பிடிக்கின்றன. மொத்தப் பரப்பு 383.845 சதுர கி.மீ. ஆனால், மதுரை (51.85), கோவை (105.6), திருச்சி (146.90), சேலம் (91.34), திருநெல்வேலி (108.65) என அனைத்து மாநகராட்சிகளைக் காட்டிலும் இது 3 அல்லது 4 மடங்குக்கு மேல் பெரியதாக இருக்கிறது.

அதிகமான கிராமப் பகுதிகளை வேலூர் மாநகராட்சியோடு இணைப்பதால், கிராமப் பகுதிகளுக்கு கிடைக்கும் அரசின் நிதி இனி கிடைக்காமல் போகலாம். மேலும், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்கள், விவசாய வளர்ச்சிக்குரிய திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போகும். பெரும்பாலான ஊராட்சிகள் வேலூர் மாநகராட்சியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளன.

எனவே, வேலூர் மாநகராட்சியில் இருந்து ஆர்க்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், மேல்விஷாரம் 3-ம் நிலை நகராட்சி, திருவலம் பேரூராட்சிகள், 57 ஊராட்சிகளை முற்றிலுமாக விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வேலூர் மாநகராட்சி மற்றும் 16 உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே இணைக்கப்படுவதால் மாநகரப் பரப்பு 84.715 சதுர கி.மீ. ஆக சுருங்கும். 2001-ம் ஆண்டின் மக்கள் தொகைப்படி மக்கள் தொகை 4,19,471 ஆகவும், 2009-2010-ம் நிதியாண்டின் கணக்கீட்டின்படி வருவாய் | 45.85 கோடியாகவும் இருக்கும்.

இதனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சாலை, குடிநீர், புதை சாக்கடை வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுத்த முடியும் என மாநகராட்சி உத்தேசித்துள்ளது.

மேலும், இதுபற்றி மாமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய அவசர கூட்டத்தையும் மாநகராட்சி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) ஏற்பாடு செய்துள்ளது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் நிரஞ்சன் மார்டி கடந்த மார்ச் 17-ம் தேதி வெளியிட்ட உத்தேச எல்லைகளை மாற்றியமைக்குமாறு, வேலூர் மாநகராட்சி கோர உள்ளது.