Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு கட்டடமாகவே இருந்தாலும் அனுமதி அவசியம்

Print PDF

தினமலர் 13.09.2010

அரசு கட்டடமாகவே இருந்தாலும் அனுமதி அவசியம்

அரசு கட்டடமாகவே இருந்தாலும், அதற்கும் அந்தந்த அதிகார அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என, தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய, மாநில அரசுத்துறை என எந்தத் துறையின் சார்பில் புதிய கட்டடம் கட்ட வேண்டுமென்றாலும், நிலத்தை மேம்படுத்த வேண்டுமென்றாலும், 30 நாட்களுக்கு முன்பே முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், நூற்றாண்டு விழா கட்டடம் மற்றும் அதையொட்டி கட்டப்பட்டுள்ள பிற கட்டடங்கள் அனைத்தும், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமலே கட்டப்பட்டுள்ளன.

 இந்த கட்டடம் கட்டப்படும்போதே, "கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு, இதை சுட்டிக்காட்டியது. சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், "அந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுவதுடன், மருதமலை ரோட்டை 100 அடி ரோடாக அகலப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை ஒதுக்காமல் கட்டடம் கட்டி வருவதாகவும்' புகார் எழுப்பினார். அவர் குறிப்பிட்ட 100 அடி ரோடு, தெலுங்குபாளையம் விரிவு அபிவிருத்தித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. புகார் எதிரொலியாக, 2008 டிச.12ல் வேளாண் பல்கலை துணை வேந்தருக்கு அப்போதைய கலெக்டரின் அறிவுறுத்தல்படி, உள்ளூர் திட்டக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியது.

 வேளாண் பல்கலை, பெயரளவுக்கு ஒரு விண்ணப்பத்தை 2009 ஜன.12ல் சமர்ப்பித்தது. அதை நிராகரித்த உள்ளூர் திட்டக்குழுமம், "நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான நிலத்தை ஒதுக்கி, அத்துடன் விரிவான வரைபடத்தையும் சமர்ப்பிக்குமாறு' அறிவுறுத்தியது. வேளாண் பல்கலைக்கழகம் அதை திருப்பி அனுப்பவே இல்லை. 2009 ஏப்.8 மற்றும் ஜூலை 29 என அடுத்தடுத்து 2 நோட்டீஸ்களை கோவை உள்ளூர் திட்டக்குழுமம் அனுப்பியது. இதுவரையிலும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை விதிப்படி சமர்ப்பிக்க வில்லை. இதற்கிடையில், "அனுமதி பெறாத கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது' என்பதன் அடிப்படையில், இந்த கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் மறுத்து வந்தது. மாவட்ட உயரதிகாரி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், "அரசு கட்டடத்துக்கு அனுமதி பெற வேண்டுமா' என்ற கேள்வி எழுந்தது. இதையறிந்து கொள்ளும் பொருட்டு, "கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பின் சார்பில், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரப்பட்டது.

 அதற்கு தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் அசோக் டோங்ராவிடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், "அரசு கட்டடமாக இருந்தாலும் தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 58ன் படி, கட்டட அனுமதி பெற வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் எந்த கட்டடம் கட்டினாலும், முறைப்படி உரிய அதிகார அமைப்பிடம் கட்டாயமாக அனுமதி பெற வேண்டுமென்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இல்லாவிடில், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சட்டரீதியாக எந்த இழப்பீடையும் கோர முடியாது என்பதும் இதனால் உறுதியாகியுள்ளது. எனவே, எல்லா அரசுத் துறைகள் கட்டும் கட்டடங்களுக்கு முறைப்படி அனுமதி பெற வேண்டுமென்பதை அரசு பகிரங்கமாக அறிவித்து, அதை செயல் படுத்த முன் வரவேண்டும்.

-நமது நிருபர்-