Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாக்கடை கட்டும் திட்டத்தில் தொடரும் சுணக்கம்

Print PDF

தினமணி 15.09.2010

சாக்கடை கட்டும் திட்டத்தில் தொடரும் சுணக்கம்

திருப்பூர், செப். 14: திருப்பூர் மாநகராட்சியில் அண்மையில் வரைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில், ரூ 40 கோடி மதிப்பில் சாக்கடைக் கால்வாய் திட்டப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி மெதுவாக நடப்பதாகத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்திய கம்யூ., மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் இருந்த வீட்டுமனைகள் மாநில அரசு உத்தரவை அடுத்து குறைந்த கட்டணத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டன. அப்பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் கட்ட, அரசு ரூ 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இத் திட்டத்தை 2010 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற உத்தரவிட்டதை அடுத்து அதற்கான பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டன. இந்நிலையில், ரூ 40 கோடி திட்டப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு முடிவடைய 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது பல பகுதிகளில் திட்டப்பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்திலும் ரூ 40 கோடி சாக்கடைக் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து இந்திய கம்யூ., உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அக் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மாநகராட்சி- 21வது வார்டில் | 40 கோடி சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணிகள் வெகு மந்தமாக நடைபெறுகின்றன. இத் திட்டத்துக்காக அப்பகுதியில் தோ ண்டப்பட்ட குழியால் தற்போது மழைநீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் தேங்குகிறது. பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பலமுறை தெரிவித்தும் தொடர்ந்து மெத்தனம் காட்டப்படுகிறது. இப் பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடைக் கால்வாய் கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேயர் க.செல்வராஜ் முன்னிலையில் அக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி பேசுகையில், அப் பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கான எல்லாவகைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்ற தெரிவித்தார். இதையடுத்து, இந்திய கம்யூ., மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.