Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும்: வின்சென்ட் எச்.பாலா

Print PDF

தினமணி 22.09.2010

நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும்: வின்சென்ட் எச்.பாலா

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "தமிழ்நாடு நீர்வளம் 2010' என்ற மாநாட்டில் நீர்வளம் தொடர்பான கையேட்டை வெளியிடுகிறார் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர்

சென்னை, செப். 21: நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வின்சென்ட் எச்.பாலா வலியுறுத்தினார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி...) சார்பில் தமிழ்நாடு நீர் வளம் 2010 என்ற தலைப்பிலான மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நீர்வளம் குறித்த கையேட்டை வெளியிட்டு, மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர்

வின்சென்ட் எச்.பாலா பேசியது:

மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி, வீட்டு உபயோகம் மற்றும் பொது சுகாதாரம் என பல்வேறு தேவைகளுக்கு குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நீரை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிற்சாலை கழிவுகள், நச்சுத்தன்மைமிக்க உரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளை வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

குடிநீர் பிரச்னை மிகப்பெரிதாக உருவெடுத்து வருகிறது. எனவே உணவுப் பொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் ஒரு சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் 81 சதவீத அளவுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். இந்த சதவீதம் இந்திய அளவில் 77 விகிதமாக உள்ளது. தமிழகத்தில் 37 சதவீத நிலத்தடி நீர் வளம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிகால் திட்டம் மற்றும் கடுமையான விதிகள் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம். இதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 900 கிலோ மீட்டர் கடலோர பகுதியில் 640 கிலோ மீட்டர் பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் நிலப்பரப்பில் வர வாய்ப்புள்ளது.

இதை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பது அவசியமாகும். இருந்தபோதிலும் 40 கிலோ மீட்டர் கடலோரப் பகுதி தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைகள் மறுசுழற்சி மூலம் நீர் வளத்தை முறையாகக் கையாள வேண்டும் என்றார் வின்சென்ட் எச்.பாலா.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர் சிவ்தாஸ் மீனா பேசியது:

சென்னையை அடுத்த பெரும்புதூரில் மறுசுழற்சி முறையில் கிடைக்கும் நீரின் தேவை குறித்து அறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மறுசுழற்சி முறையில் கிடைக்கும் நீரை இதர தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம். இதற்கான எதிர்மறை சுத்திகரிப்பு நிலையம் விரைவில் கோயம்பேட்டில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

சி... தமிழ்நாடு பிரிவின் தலைவர் நந்தினி ரங்கசாமி மற்றும் என்.கே.ரங்கநாத், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.