Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ180 கோடியில் மழை நீர் வடிகால் விரைவில் பணி துவக்கம்

Print PDF

தினகரன் 28.09.2010

ரூ180 கோடியில் மழை நீர் வடிகால் விரைவில் பணி துவக்கம்

கோவை, செப். 28:கோவை மாநகராட்சியில் 180 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணி கவுன்சில் ஒப்புதல் பெற்றதும், துவங்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சியில், பல இடங்களில் மழை நீர் வடிகால் இருக்கிறது. ஆனால், இந்த வடிகால் சாக்கடை கால்வாயாக மாறி விட்டது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 700 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால், நீரோடை சீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி பகுதி 112 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 3 கட்டமாக பணிகளை பிரித்து நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 31 மண்டல பகுதியில், 180 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படும். 731 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வடிகால் குளம், நீர் தேக்கம், நொய்யல் ஆற்றில் முடியும் வகையில் அமைக்கப்படும்.

கோவை நகரில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், சங்கனூர் பள்ளம், நொய்யல் ஆறு, கருப்பராயன் ஓடை வரை வடிகால் அமைத்து தரப்படும். இந்த வடிகால் மூலம் கோவை நகரில் குளம், நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் 377.17 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தால், நகரில் சாக்கடை நீர் மழை நீர் வடிகால் மற்றும் குளங்களுக்கு செல்ல வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

மழை நீர் வடிகால் மூலம் மழை நீர் குளங்களுக்கு அதிகளவு பாயும் என மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர். மழை நீர் வடிகால் பணிகளை நடத்த அதிக ஒப்பந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது. மாநகராட்சி நிர்ணயித்த தொகைக் குள் பணிகளை முடிக்க பல ஒப்பந்த நிறுவனம் தயாராக இருக்கிறது. இதர திட்ட பணிகளை காட்டிலும் மழை நீர் வடிகால் பணிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே பணிகள் தடையின்றி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி மன்ற கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் பணிகளை உடனடியாக துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.