Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிகளுக்கு புறம்பான கட்டடங்கள் ஆய்வறிக்கை

Print PDF

தினமலர் 02.10.2010

விதிகளுக்கு புறம்பான கட்டடங்கள் ஆய்வறிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், விடுதிகள் மற்றும் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கு நகர ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் அமைந்துள்ள உள்ளூர் திட்டக் குழுமம் அலுவலகத்தில் தமிழக நகர்புற ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் 2010-11ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில், சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2,000 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடம் ஆகியவற்றுக்கு உள்ளாட்சிகள் அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.அனுமதியற்ற மனைப் பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது. அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியில் அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்திற்கு அல்லது மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் ஏராளமான புதிய நகர்கள் உருவாகியுள்ளன. எனவே, இந்நகர்களுக்கு புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்க உள்ளோம். தமிழக நகர்புற ஊரமைப்பு துறை சார்பில் புதிதாக t.ஞ்ணிதி.டிணசஞீtஞிணீ என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் ஆகியவற்றை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது.காஞ்சிபுரம் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 48 கட்டடங்களுக்கும், ஆறு வீட்டுமனைப் பிரிவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 56 மற்றும் 57ன் கீழ் அங்கீகாரம் பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரில் அனுமதி பெறாமல் பல திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காமல் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அதன்பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் விதிகளை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கட்டடங்கள் சீல் வைக்கப்படும். இவ்வாறு பங்கஜ்குமார்பன்சால் தெரிவித்தார்.