Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கோட்டை அருகே கட்டப்படும் பார்க்கிங் கட்டிடம் இடிந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை

Print PDF

தினகரன்                  02.11.2010

செங்கோட்டை அருகே கட்டப்படும் பார்க்கிங் கட்டிடம் இடிந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை

புதுடெல்லி, நவ. 2: "செங்கோட்டை அருகே சுபாஷ் மைதானத்தில் கட்டப்பட்டு வந்த பார்க்கிங் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை. கட்டுமானப் பகுதியில் அடித்தளத்தில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் தண்ணீர் கசிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்று மாநகராட்சி பத்திரிகை மற்றும் தகவல் இயக்குநர் தீப் மாத்தூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

செங்கோட்டை அருகே சுபாஷ் மைதானத்தில் மூன்றடுக்கு வாகன நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாகன ங்களை நிறுத்த கடும் இடப்பற்றாக்குறை நிலவுவதால், இந்த வாகன நிறுத்த கட்டுமானத்தை மாநகராட்சி கட்டி வருகிறது. இதில் 800 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்த கட்டுமானப்பகுதியில் கடந்த சில நாட்களாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் முதல்கட்ட விசாரணையில், கட்டுமானம் நடைபெற்று கொண்டிருக்கும் பகுதியில் கீழ் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் தண்ணீர் கசிந்து இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. 12 பேர் மட்டும் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயற்கையாக நடந்த இச்சம்பவத்தில் யார் மீதும் குற்றம்சாட்டவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார். குடிநீர் குழாய் உடைந்ததால், கட்டுமானம் இடிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் வாகன நிறுத்த பகுதியை பார்வையிட்டு நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

நோட்டீஸ்:

இதற்கிடையே, செங்கோட்டை அருகே கட்டப்பட்டு வரும் இந்த வாகன நிறுத்த கட்டுமானத்துக்கு எதிராக விளக்கம் கேட்டு தேசிய அகழ்வாராய்ச்சித் துறை மாநகரா ட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து 200 முதல் 300 மீட்டருக்கு எந்த கட்டுமான பணியையோ, புணரமைப்பு பணியையோ, இடிக்கும் பணிகளையோ செய்யக்கூடாது. ஆனால், 300 மீட்டருக்குள் இந்த வாகன நிறுத்த கட்டுமானம் கட்டப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.