Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு தடை: பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை

Print PDF

தினமலர்                     08.11.2010

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு தடை: பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை

விருதுநகர்: மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளின் பதிவை தடை செய்ய பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கிராமப்புறங்களில் அங்கீகாரம் பெறாமல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பதால் இவற்றை வாங்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக நகராட்சியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இதுபோன்ற வீட்டுமனைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 4,000 சதுர அடிக்குள் வீடுகள் கட்டினால் நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்திலும், அதற்கு மேல் இருந்தால் மதுரையில் உள்ள உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள நகர், ஊரமைப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறும் பட்சத்தில் பூங்கா, ரோடு, வாறுகால் போன்ற வசதிகளுக்காக 10 சதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தானமாக வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் பல இடங்களில் மீறி, வீட்டு மனைகள் விற்கப்படுகின்றன. இதுபோன்ற வீட்டு மனைகளுக்கு வருவாய்த்துறையினரும், பத்திரப்பதிவு அலுவலர்களும் கண்காணித்து பத்திரப்பதிவு செய்வதை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு மனை வாங்குபவர்களும், அரசு அங்கீகாரம் பெற்ற மனைகளை வாங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.