Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சார்கோப்&மான்கூர்டு இடையே சுரங்கப் பாதை மெட்ரோ வேண்டும்

Print PDF

தினகரன்                         11.11.2010

சார்கோப்&மான்கூர்டு இடையே சுரங்கப் பாதை மெட்ரோ வேண்டும்

மும்பை, நவ. 11: சார்கோப்& மான்கூர்டு இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் தடம் அமைக்க வேண்டும் என மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடம் (எம்எம்ஆர்டிஏ), மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மும்பையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மக்கள் நல அமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. மேம்பாலம் கட்டி மெட்ரோ அமைப்பதை விட்டு சுரங்கப் பாதையில் மெட்ரோ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சார்கோப்&மான்கூர்டு இடையே, பாந்த்ரா வழியாக 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் தடம் அமைக்க எம்எம்ஆர்டிஏ திட்டமிட்டுள்ளது. இதற்குமக்கள் நல கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து கூட்டமைப்பு நிர்வா கிகளை அழைத்து பேச எம்எம்ஆர்டிஏ கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட் முடிவு செய்தார்.

கடந்த செவ்வாய் கிழமை, ரத்னாகர் கெய்க்வாட் தலைமையில், மெட்ரோ திட்ட உயரதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர். மேம்பால மெட்ரோவுக்கு பதில் சுரங்கப் பாதை மெட்ரோ அமைக்க வேண்டும் என கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அதை எம்எம்ஆர்டிஏ அதிகாரிகள் ஏற்கவில்லை. கூட்டம் முடி ந்த பிறகு பேட்டி அளித்த கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான ஹன்செல் டிசோஸா கூறுகையில், ‘’சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய மாநகரங்களைவிட மும்பையில் மெட்ரோ அமைக்க அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை சிறிது கூடுதலாக ஒதுக்கீடு செய்து சுரங்கப் பாதையில் ஏன் மெட்ரோ தடம் அமைக்க கூடாது" என்றார்.

எம்எம்ஆர்டிஏ கமிஷனர் கூறுகையில், "மேம்பால மெட்ரோ திட்ட செலவைவிட சுரங்கப் பாதை மெட்ரோவுக்கு கூடுதலாக ரூ56,000 கோடி செலவாகும். ஒரு சில கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். அதை அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது" என்றார்.