Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிபந்தனையுடன் கட்டட அனுமதி: புதுவிதியால் பொதுமக்கள் அதிருப்தி

Print PDF

தினமலர்                19.11.2010

நிபந்தனையுடன் கட்டட அனுமதி: புதுவிதியால் பொதுமக்கள் அதிருப்தி

"ரத்து செய்யப்படலாம்' என்ற புதுவிதமான நிபந்தனையுடன் மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது; இதற்கு, மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்க பெற அடுக்கு அதிகார அமைப்புகள் உள்ளன; சிறிய வகை கட்டடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம். அதற்கு மேற்பட்ட பெரிய மற்றும் வணிக கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழுமம், மலையிட பாதுகாப்புக் குழுமம் அல்லது நகர ஊரமைப்புத் துறை துணை இயக்குனர் அலுவலகங்கள் அனுமதி வழங்கலாம்.

அதற்கும் மேற்பட்ட பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கு சென்னை நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் மட்டுமே அனுமதி வழங்க முடியும். இவற்றில், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி கோரும் விண்ணப் பங்களே அதிகம்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கட்டும் வீடுகள் அனைத்துக்கும் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கே உண்டு.இதுநாள் வரையிலும், அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது ஆகிய இரு பணிகளை மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் செய்து வந்தன. சமீபகாலமாக, "கட்டடம் கட்டப்படும் இடம், பொது ஒதுக்கீட்டு இடமாகவோ, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் கையகப்படுத்திய நிலமாகவோ இல்லாதவரையிலுமே இந்த அனுமதி செல்லும்' என்ற புதுவித நிபந்தனையுடன் வரைபட அனுமதி வழங்கப்படுகிறது.அத்துடன், "அத்தகைய இடமாக இருந்தால், வரைபட அனுமதி ரத்து செய்யப்படும்' என்ற நிபந்தனையும் அதில் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிபந்தனை அனுமதி, பொது மக்களுக்கு பெரும் குழப்பத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டடம் கட்டப்படும் இடம், பொது ஒதுக்கீட்டு இடமா அல்லது அரசுத்துறை கையகப்படுத்திய நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டியது உள்ளாட்சி அமைப்புதான். நில உச்சவரம்புச் சட்டம், நில எடுப்புச் சட்டம், நிலச் சீர்திருத்தச் சட்டம் என பல்வேறு சட்டங்களின் அடிப்படையில், வகைப்படுத்தப்பட்ட நிலமா, இல்லையா என்பதை ஆய்வு செய்து, வருவாய்த்துறை சார்பில் தடையின்மைச் சான்று வழங்கிய பின்பே, லே-அவுட் அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை நகர ஊரமைப்புத்துறை ஏற்றுக்கொள்ளும்.

அதுமட்டுமின்றி ரோடு, பொது ஒதுக்கீட்டு இடம் ஆகியவற்றுக்கான இடங்களை சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்புக்கு தானப்பத்திரம் மூலமாக ஒப்படைத்த பின்பே, லே-அவுட்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அரசுத்துறைக்கு கையகப்படுத்திய நிலம் இல்லை என்று தெரிந் தால் மட்டுமே, அந்த லே-அவுட்டுக்கான தொழில்நுட்ப அனுமதியை நகர ஊரமைப்புத்துறை வழங்கும்.ஆகமொத்தத்தில் பொது ஒதுக்கீட்டு இடம், அரசு கையகப்படுத்திய நிலம் போன்ற விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதே உள்ளாட்சி அமைப்புகள்தான். ஆனால் அந்த அமைப்பை நிர்வகிக்கும் அதிகாரிகளே, இப்படியொரு நிபந்தனையுடன் கட்டட அனுமதி வழங்குவது, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை வெளிப்படுத்துகிறது.

"கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ""சட்டத்தைப் பற்றியோ, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றியோ எந்தக் கவலையுமே இல்லாமல் இப்படியொரு நிபந்தனையுடன் அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். ""தவறுகளை தவிர்க்க வேண்டிய அதிகாரிகள், தவறுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இது சட்ட விரோதம் என்பதோடு, மக்களை துன்புறுத்துவதாகும்,'' என்றார். கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக இடத்தை ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரி பார்த்து, முழு திருப்தியான பின் அனுமதி வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை; இத்தகைய அனுமதி வழங்குவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மறைமுக ஆதரவு? : முறைப்படி உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற கட்டடங்களுக்கு மட்டுமே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது; ஆனால், இப்படிப்பட்ட நிபந்தனையுடன் அனுமதி வழங்கும் பட்சத்தில், வங்கி நிர்வாகங்கள் கடன் தருவதும் பெரும் சிக்கலாகும். "இந்த நிபந்தனை, பொதுஒதுக்கீட்டு இடங்களை வாங்கக்கூடாது' என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இத்தகைய இடங்களை ஏமாற்றி விற்போருக்கு மறைமுகமாக துணை புரிவதைப்போல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -