Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரம் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு மாநகராட்சியிடம் விரைவில் அறிக்கை

Print PDF

தினகரன்                  23.11.2010

5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரம் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு மாநகராட்சியிடம் விரைவில் அறிக்கை

புதுடெல்லி, நவ. 23: கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரத்தில், அந்த இடத்தை ஆய்வு செய்த மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு அதிகாரிகள் விரைவில் தங்களது அறிக்கையை மாநகராட்சியிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாயினர். மேலும் 85க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரி மையாளர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மாநகராட்சியின் கோரிக்கைப்படி மத்திய கட்டிட ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கிழக்கு டெல்லி பகுதியில் பலவீனமாக உள்ள கட்டிடங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.

ரூர்கியில் இருக்கும் இந்த அமைப்பின் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை டெல்லி வந்தனர். அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கட்டிடம் இடிந்த இடம் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இடிந்த கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களையும் அவர்கள் ஆய்வுக்காக எடுத்து கொண்டனர்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் பாதுகாப்பு இல்லாதவை என்று மாநகராட்சியில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் இக்குழுவினர் ஆராய்ந்தனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல்வேறு தொழில்நுட்ப காரணிகளின் அடிப்படையில் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

தங்களுடைய முடிவை தெரிவிக்க மேலும் சில நாட்கள் தங்களுக்கு அவகாசம் தேவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஓரிரு நாட்கள் தங்கள் ஆய்வு முடிவு குறித்து அவர்கள் விவாதித்து அறிக்கை தயாரிக்க உள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.