Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியை குற்றம் சொல்லக்கூடாது அங்கீகாரமற்ற குடியிருப்புகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும்

Print PDF

தினகரன்                  02.12.2010

மாநகராட்சியை குற்றம் சொல்லக்கூடாது அங்கீகாரமற்ற குடியிருப்புகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும்

புதுடெல்லி, டிச. 2: அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் எல்லைகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும். அதன்பின்னர் மாநகராட்சி மீது குற்றம்சாட்ட வேண்டும் என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறினார்.

மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:

அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிப்பதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் எல்லைகளை அவர்கள்தான் முதலில் வரையறுக்க வேண்டும். அதைவிட்டு மாநகராட்சி மீது குற்றம்சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது. அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் மேம்பாட்டுக்காக மாநகராட்சிக்கு போதுமான நிதியையும் மாநில அரசு ஒதுக்கவில்லை. அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளை அரசு வரையறுத்துவிட்டால், லேஅவுட் பிளானை மாநகராட்சி இறுதி செய்துவிடும். அதற்கு முன்னதாக மாநகராட்சியால் இதை செய்ய முடியாது.

2010&11ம் ஆண்டில் அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால், இதுவரையில் ரூ.37.50 கோடி மட்டுமே அரசு தந்துள்ளது. 1998ம் ஆண்டில் இதுவரையில் இப்பணிகளுக்காக ரூ.569 கோடியை மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், சட்டசபையில் அரசு சார்பில் அளித்துள்ள பதிலில், இப்பணிகளுக்காக இந்த காலக்கட்டத்தில் ரூ.3,326 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ரூ.2,755 கோடி அவர்கள் வேறு பணிகளுக்கு திருப்பியுள்ளனர் என்பதுதான் உண்மை.

இதேபோல், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சொத்து வரியில் விலக்களிக்கும் அரசாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இதுதொடர்பாக 2007 முதல் 2010ம் ஆண்டு வரையில் மாநகராட்சி நிறைவேற்றிய 5 தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை. மூத்த குடிமக்களுக்கு சொத்து வரியில் வழங்கும் தள்ளுபடி சலுகையை பெறும் வகையில், இதற்கான வயது வரம்பை 65ல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும் என்று மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல், பெண்களுக்கும், 100 முதல் 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தங்களது சொந்த இடத்தில் தொழில் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு 30 சதவீதம் சொத்து வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றார்.