Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதி மீறல்: 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி             02.12.2010

விதி மீறல்: 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

சேலம், டிச. 1: சேலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 80 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் தெரிவித்தார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கட்டடம் கட்டுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்காக சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த பங்கஜ் குமார் பன்சல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 4 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்பிலேயே கட்டட உரிமையாளர்கள் அனுமதி பெறலாம். அதற்கு மேலான பரப்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மண்டல அலுவலகம், இயக்குநர் அலுவலகத்தில்தான் அனுமதி பெற வேண்டும்.

மேலும் அனுமதி பெறாமல் கட்டுவது, விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட உயரமாக கட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக சேலம் மண்டலத்தில் 80 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகரமைப்புத் திட்டம் தீட்டப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீட்டு மனைகளுக்கு மட்டுமல்லாமல் திட்டத்தில் சேர்க்கப்படாத பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது. மேலும் மின்சார வசதி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்க முடியாது. மேலும் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் மொத்த பரப்பளவில் 10 சதவீதத்தை பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும். அத்துடன் போதிய சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மலைப் பிரதேசங்களில் சுமார் 250 சதுர மீட்டர் அளவிலான கட்டடங்கள் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டும். 300 சதுர மீட்டர் பரப்பளவிலான கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதியையும், அதற்கும் பெரிய கட்டடங்கள் கட்ட இயக்குநரின் அனுமதியையும் பெற்றுதான் கட்டடங்கள் கட்ட வேண்டும். ஆனால் சில மலைப் பிரதேசங்களில் விதிகளை மீறிய கட்டடங்கள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோல் வனத்துறை, வேளாண்மைத்துறை அனுமதி இல்லாமல் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களுக்கு சீல் வைக்கவும் அதிகாரம் உள்ளது.