Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிவிதி இல்லை

Print PDF

தினகரன்                07.12.2010

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிவிதி இல்லை

புதுடெல்லி, டிச.7: அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் தனி விதி எதுவும் இல்லைஎன்று மாநகராட்சி கமிஷனர் கே.எஸ். மெஹ்ரா கூறினார்.

லட்சுமி நகர் லலிதாபார்க் அருகே இருந்த 5 மாடி கட்டிடம் கடந்த 15ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 70 பேர் பலியாயினர். இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ‘அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்? அதற்கு என தனியாக விதி எதுவும் உள்ளதா?’ என்று டெல்லியை சேர்ந்த சஞ்சய் கன்னா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மாநகராட்சிக்கு மனுச் செய்து இருந்தார்.

அதற்கு மாநகராட்சி சார்பில் கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக சட்டவிதி எதுவும் இல்லை. அதேபோல எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கால அவகாசமும் வரையறுக்கப்படவில்லை.

அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதாக தகவல் அல்லது புகார் வந்தால் மாநகராட்சியில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் நேரில் சென்று விசாரணை நடத்துவார். அதன்பிறகு தேவைப்பட்டால் மாநகராட்சி விதியின்படி நடவடிக்கை எடுப்பார்.

2007 ம் ஆண்டு முதல் இதுவரை விதி முறைகளை மீறி கட்டிடம் கட்ட லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கிய 533 மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு ஜூன் வரை சிவில் லைன்ஸ் பகுதியில் இருந்து மட்டும் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதாக சுமார் 7,516 புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கே. எஸ். மெஹ்ரா அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளார்.