Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதி மீறல்: 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி               15.12.2010

விதி மீறல்: 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

திருப்பூர், டிச.14: உள்ளூர் திட்டக் குழுமம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறி திருப்பூரில் கட்டப்பட்டுள்ள 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது. 30 நாட்களுக்குள் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடங்களை அடைத்து சீல் வைக்கவும் உள்ளூர் திட்டக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் உள்ளூர் திட்டக் குழுமத்தில் திருப்பூர் மாநகராட்சி, 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிப்பாளையம், மங்கலம், ஆண்டிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, இடுவாய், அவிநாசி ஒன்றியத்தில் புதுப்பாளையம், கணியாம்பூண்டி, ஊத்துக்குளி ஒன்றியத்தில் சர்க்கார் பெரியபாளையம், அக்ரஹார பெரியபாளையம் ஆகிய ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்நிர்வாகத்தின் மொத்த பரப்பளவு 219.99 சதுர கி.மீ.

தற்போது, திருப்பூர் உள்ளூர் திட்டக் குழும எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்கள் முறையான அனுமதி பெறாமலும், பெறப்பட்ட அனுமதிக்கு உட்பட்டும் கட்டப்படுவதில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன.

அதனடிப்படையில், உள்ளூர் திட்டக் குழுமம் வகுத்துள்ள விதிகளை மீறியும், முறையான அனுமதியில்லாமலும் கடந்த 5 ஆண்டுகளில் 435 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. அக்கட்டடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் புதன்கிழமை முதல் வழங்கப்பட உள்ளதாக நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் திருப்பூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விதிமுறை மீறியும், முறையான அனுமதி பெறமாலும் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் உள்ளூர் திட்டக் குழுமத்தின் எச்சரிக்கை நோட்டீஸ் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முறையான அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். இல்லையேல், அக்கட்டடங்களை அடைத்து சீல் வைக்கப்படும்.

தவிர, உள்ளூர் திட்டக் குழும அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அதில் முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். விதிமுறை மீறப்பட்ட கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.

புதியதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து பெறப்படும் அனுமதியைக் கொண்டு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் பெறப்படுகிறது. பிறகு, உள்ளூர் திட்டக் குழும அனுமதியை மீறி கூடுதலான உயரம் கட்டடங்கள் கட்டுவதால் அவ்வசதிகள் துவக்கத்திலேயே வழங்கப்படுவதை தடுக்க முடிவதில்லை.

அங்கீகாரிக்கப்படாத வீட்டுமனைகள் விற்பனை திருப்பூர் சுற்று வட்டாரத்தில் அதிகரித்து வருகின்றன.

வீட்டுமனைகள் வாங்குவோர் அந்நிலம் உரிய அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

அதற்கான விதிமுறைகள் குறித்து நகர் ஊரமைப்புத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தவிர, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முறையான அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனைகளை விற்கக் கூடாது என்றார்.